எனது விசித்திரங்கள்!

ஷ்ரேயா என்னிடம் இருக்கிற சித்திர விசித்திர குணாம்சங்களை சொல்ல அழைத்து பல நாட்கள் (அல்லது கிழமைகள், அல்லது மாதங்கள்) ஆயிற்று. ஷ்ரேயா, 'விசர்க்குணங்கள்' என்பதை மற்றவர்களிடம் கேட்கும்போது மட்டும் கொஞ்சம் நாகரீகமாக 'விசித்திர குணங்கள்' என்று சொல்லியிருக்கிறார் போல இருக்கு :). (பின்ன என்ன, 'விசர்க்குணங்கள் இருக்குது என்டு தெரிஞ்சுதான் கூப்பிட்டிருக்கிறீங்க போல!! :O)' எண்டு தன்னை இந்த விளையாட்டுக்கு கூப்பிட்ட ஆக்களிட்டை சொல்லிப் போட்டு, அதே விளையாட்டுக்கு எங்களை கூப்பிட்டால்??? ). இந்த கால இடைவெளியில், எழுத நேரம் இல்லாவிட்டாலும், என்னிடமிருக்கின்ற, இருந்த, (இன்னும் இருக்கப் போகின்றதாக நான் நினைக்கும்) விசித்திர குணங்களை மனதில் அசைபோட்டுப் பார்த்தேன். ஐந்து குணங்கள் தான் கேட்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நினைத்துப் பார்த்தால் என்னிடம் நிறையவே விசித்திரம் (விசர்த்தனம், லூசுத்தனம், கிறுக்குத்தனம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட weirdness) இருக்கும்போலிருக்கு. எதைச் சொல்ல? எதை விட? ஏதோ என்னாலானதை நானும் சொல்லி விட்டுப் போகின்றேனே. :) Weird round விளையாட்டு முடிஞ்சு இவ்வளவு காலம் தாழ்த்தி, அது பற்றி எழுதுகின்றேனே. இதுவே Weird தானே????

1. கனவுகள்: விசித்திரம் என்றதுமே எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது நான் காணும் கனவுகள். இது என் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவும், தானாகவே வருவதாகவும் இருந்தாலும், இந்த விசித்திரத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை. நான் எப்போதாவது கனவு காணாமல் தூங்கியிருப்பேனா என்றே தெரியாது. என்னை சினேகிதிகள் 'கனவுக்கன்னி' என்று நக்கல் அடித்தாலும், என்னிடம் அன்று கண்ட கனவு என்ன என்று கேட்க தவற மாட்டார்கள். அவ்வளவு விசித்திரமான கனவுகள். நாவல் (நீண்ட கனவுகள்), சிறு கதைகள் (குறுகிய கனவுகள்), தொடர்கதைகள் (சொன்னா நம்புங்க, எனக்கு ஒரு கனவின் தொடர்ச்சி, ஒரு விழிப்பின் பின்னர் அடுத்த தூக்கத்தில் தொடரும்) எல்லாம் வரும். ஒரு கனவு கண்டு எழுந்த பின்னர், அந்த கனவு கண்டதாக அடுத்த கனவில் வேறு யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பேன். சில சமயம் கனவிலேயே 'நான் காண்பது கனவா?' என்ற கேள்வி எழுவதும், அதை உறுதி செய்ய என்னை நான் கிள்ளிப் பார்த்துக் கொள்வதும், அது வலிப்பதாயும் அதனால் நான் காண்பது கனவில்லை என்ற முடிவுக்கு வருவதும் நடப்பதுதான். ஒரு நாளாவது 'இது நிச்சயம் கனவுதான்' என்ற முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கனவுகள் ஒருபோதும் கலரில் வருவதில்லை என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். ஆனால் எனக்கு கலரில்தான் வருகின்றது. எழுந்த பின்னர் கனவில் கண்ட கலர் நினைவில் இருந்தால் கனவு கலர் கனவுதானே? (சில சமயம் black and white இலும் வரும்).


சரி, அப்படி என்னதான் விசித்திர கனவு, அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.....

*ஏரிகளில், கடலில் எல்லாம் நீரின் மேற்பரப்பில் நடந்து போவேன். அப்படியே பின்னர் உள்ளே போய் விடுவேன். அங்கே மாடமாளிகைகள் எல்லாம் இருக்கும். சிலவேளை புராணக் கதையில் வருபவர்கள் எல்லாம் இருப்பார்கள். நானும் அவர்களுடன் இருப்பேன். சில சமயத்தில் தற்கால நிகழ்ச்சிகளும் வரும், இப்படியே தொடரும். கனவிலன்றி, உண்மையில் நீர்நிலையின் மேலாக நடக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இங்கே நல்ல winter season இல், snow அதிகம் இருந்த சந்தர்ப்பத்தில், கீழே நீரும், மேலே இறுகிப் போன snow வும் இருந்தபோது, மேலே நடந்த போது, எனக்கு அந்த கனவு பலித்ததாய் தோன்றியது. நல்லவேளை உள்ளே போகவில்லை. விறைத்து செத்திருப்பேன். :)

*இந்தியாவில் எங்கள் குடும்பம் சுற்றிப் பார்க்க போனோம். எஸ்.பி. பாலசுப்ரமணியம் நமக்கு ஊர் சுற்றிக் காட்டினார். அதுவும் நெரிசல் நிறைந்த பஸ்ஸிலேயே கூட்டிப் போனார். பஸ்ஸில் ஏறியதே விசித்திரம்தான். ஓடுகின்ற பஸ்ஸில் அவரும் ஏறிக் கொண்டு, எங்களையும் ஏறச் சொன்னார். அட, நானும் மிகச் சுலபமாக ஏறிக்கொண்டேன். பாவம் அம்மாவுக்கு ஓடி ஏறத் தெரியவில்லை.

*இரட்டையர்கள் போல், என்னுடன் ஐந்து பேர் ஒன்றாக பிறந்திருப்பார்கள். அதனால் வரும் சிக்கல்கள்.

கனவு சொல்ல சொன்னால் சொல்லிக் கொண்டே இருப்பேன். பிறகு இது கனவுக் கட்டுரை ஆகி விடும். அதனால் இங்கே நிறுத்துகின்றேன். சிலசமயம் கொஞ்சம் கூட நான் நினைத்தே பார்க்காத விஷயங்கள் எல்லாம் கனவில் வரும்போது, ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். சிலவேளை, அன்றன்றைக்கு நடந்த, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்கள் ஒன்றாய் கலந்து சாம்பார் கனவாக வரும்.

பல சந்தர்ப்பங்களில், கனவுகளை ரசித்தாலும், சில சமயம் இந்த கனவுகளை எப்படியாவது நிறுத்தி விட மாட்டோமா என்று தோன்றுவதும் உண்டு. காரணம், இரவு முழுவதும் கனவு தொடர்வதால், காலையில் எழும்போது, தூங்கி எழுந்தது போல் இல்லாமல், முழு இரவும் விழித்திருந்ததாய் தோன்றி, சோர்வாக இருக்கும்.


(மேலதிக தகவல் ஒன்று... எங்கள் குட்டித் தேவதை நேற்றிரவு தான் கண்ட கனவைக் கூறினாள். Mount Everest இல் அப்பாவும், அவளும் ஏறினார்களாம். பரவாயில்லை. அம்மாவுக்கு ஏற்ற பிள்ளைதான்.)



2. சேகரிப்பும் ஒழுங்கும்: சிறு வயதில் எதைக் கண்டாலும் அதை சேகரிக்கும் ஒரு பழக்கம் இருந்தது. முத்திரை சேகரிப்பில் ஆரம்பித்தேன். நாணயங்கள் (மறந்திருந்த தமிழ் சொற்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வர :) இந்த பதிவுகள் உதவுது) சேகரித்தேன். பிறகு Post cards, பூ படங்கள், இயற்கை அழகுப் படங்கள், வெவ்வேறு விதமான மணிகள், என்று போய், பிறகு ஸ்வீட்ஸ் சுற்றி வரும் தாள், சோப் சுற்றி வரும் தாள் என்று எல்லாக் குப்பையும் சேகரிக்க தொடங்கினேன். ஒரு சிவப்பும், கறுப்பும் சேர்ந்த மணி போன்ற ஒரு விதை ஒரு மரத்தில் இருந்து எடுத்து (அதன் பெயர் எனக்கு தெரியாது. குழைக்காட்டை சேர்ந்தவர்களுக்கு :) தெரியும் என நினைக்கிறேன், புதர் நிறைந்த இடங்களில், ஏதோ ஒரு புதரில் இருக்கும். அது காய்ந்து போகாமல் இருக்கும்) அதையும் கூட சேகரித்தேன். எல்லாவற்றையும் எனக்கென்று இருந்த ஒரு மேசையில் அழகாக அடுக்கி வைப்பேன். யாரும் அதில் தொடக் கூடாது. தொட்டால் கோபம் கோபமாய் வரும். கோபம் வந்தால் அழுவதுதான் என் வழக்கம்.

ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடைய சேகரிப்பு பொருளில் ஒன்றை எனது தங்கை கேட்க, நான் தரமாட்டேன் என்று அடம் பிடிக்க, பிரச்சனை அம்மாவிடம் விசாரணக்குப் போய், 'நீ பெரியவள்தானே விட்டுக் கொடுத்து விடு' என்று அம்மா தீர்ப்புச் சொல்ல, கோபத்தில் எல்லாவற்றையும் தூக்கி அவளிடம் கொடுத்து விட்டேன். அதன் பிறகு, என்னால் சேகரித்து, பல வருடமாய் பாது காக்கப்பட்ட பொருட்களின் ஆயுள்காலம் விரைவாய் முடிந்து விட்டது. :)

வீட்டிலும் நான் ஒழுங்கு செய்து வைப்பதை வேறு யாரும் மாற்றி வைப்பது பிடிக்காது. நானே நேரத்துக்கு நேரம் இடம் மாற்றி வைப்பது வேறு விஷயம். :) புத்தகங்களை அடுக்கி வைத்தால், இருட்டில் கூட போய் எடுத்து வந்து விடலாம். எந்த அடுக்கில், எத்தனையாவதாக என்ன புத்தகம் இருக்கு என்பது நன்றாக தெரியும்.

இப்போது நிலமை தலைகீழாகி வருகின்றது. நான் எதை அடுக்கி வைத்தாலும், அதை கலைத்துப் போடுவது எங்கள் வீட்டு குட்டித் தேவதையின் வேலை. கொஞ்ச நாள் அவள் கலைத்துப் போட போட நான் அடுக்கி வைத்துக் கொண்டே இருந்தேன். இப்போது களைத்துப் போய் விட்டேன். அதனால் ஓரளவுக்கு ஒழுங்கற்று இருக்கவும் பழகிக்கொண்டு வருகின்றேன்.

3. தேவையற்ற மனப் பதட்டம்: தேவையே இல்லாமல் மனப்பதட்டம் கொள்வது என்னிடம் இருக்கும் நானே விரும்பாத ஒரு இயல்பு. இதற்கு சில உதாரணம்.

அன்புக்குரியவர்கள், நெருங்கியவர்கள் எங்காவது போயிருந்தால், நான் எதிர் பார்க்கும் நேரத்தில் அவர்கள் திரும்பாவிட்டால், என்ன நடந்திருக்கும் என்று யோசித்து மனதில் பதட்டம் ஆரம்பிக்கும். நேரம் செல்ல செல்ல அதிகரித்து, அவர்கள் வரும்வரையோ, அல்லது அவர்களிடம் இருந்து ஏதாவது தகவல் வரும்வரையோ பெரிய மன உளைச்சலாகவும் கஷ்டமாகவும் இருக்கும்.

மகளின் ஸ்கூல் பக்கமாய் ambulance போவதைக் கண்டால் ஒரு பதட்டம் ஆரம்பிக்கும். அங்கிருந்து ஏதாவது போன் வந்து விடுமோ என்ற பதட்டமும், அப்படி வந்து விடக் கூடாதே என்ற பயமும் கொஞ்ச நேரத்துக்கு இருக்கும். குறிப்பிட்ட நேரம் வரை எந்த போனும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பதட்டம் தணியும்.

4. உடமைகள்: என்னுடைய பொருட்கள் வேறு எங்காவது இருப்பது பிடிக்காது (நானே அவர்களுக்கு கொடுத்தால் சரி). அதே போல் மற்றவரின் உடமைகள் என்னிடம் இருப்பதும் பிடிக்காது. ஹொஸ்டல் வாழ்க்கையின் போது, யாராவது தங்கள் பொருட்களை மறந்து போயோ, அல்லது பிறகு எடுக்கலாம் என்ற எண்ணத்திலோ என் அறையில் வைத்துவிட்டு போக முடியாது. முதல் வேலையாய் அதை எடுத்துக் கொண்டு போய் அவர்கள் அறையில் வைத்து விட்டு வருவேன். அப்படி அவர்கள் அறையில் இல்லாவிட்டாலும், எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பிடித்து, கையுடன் கூட்டிச் சென்று அங்கே வைத்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன். "இவள் ஒருத்தியோட பெரிய கரைச்சல்" என்று திட்டு வாங்கினாலும், அந்த பழக்கத்தை என்னால் விட முடியாமல் இருந்தது.

5. இன்னும் சில>

* கற்பனை: தாறுமாறா எதையாவது கற்பனை செய்வது. A beautiful mind படம் பார்த்த போது, ஒருவேளை John Nash க்கு தெரிந்ததுபோல், நான் பார்க்கும் மனிதர்களில் சிலரும் எனது கற்பனையில் வரும் மனிதர்களாய் இருப்பார்களோ என்ற சந்தேகம் கூட தோன்றியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சே சே அப்படியெல்லாம் இருந்தால், என்னை எப்போதோ மனநல வைத்தியசாலையில் சேர்த்திருப்பார்கள் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். :) இன்னொரு முக்கியமான விஷயம்... உடனே நான் எதோ என்னை John Nash க்கும், அவருடைய கற்பனைக்கும் என்னை ஒப்பிட்டு பேசுவதா தப்பா எடுத்துக்காதீங்க. :))) கற்பனை செய்வதை மட்டும்தான் சொல்கின்றேன். கற்பனையில் வரும் விஷயங்களை அல்ல.

* திட்டமிடுதல். நான் ரொம்ப விருப்பத்துடன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை செய்து முடிக்கும்வரை அதே சிந்தனையில் இருப்பேன். செய்தும் முடிப்பேன். ஆனால், அதே நேரம் கட்டாயம் செய்ய வேண்டியவை என்றிருக்கும் விடயங்களை, எத்தனைதான் திட்டம் போட்டாலும் தவிர்த்துக் கொண்டே இருப்பேன். படிக்கின்ற காலத்தில், கவனமெடுத்து படிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு வகுப்பிலும் நினைத்ததும், பல்கலைக்கழகத்திலும், அதுவே ஒவ்வொரு வருட திட்டமாய், செமஸ்டருக்குரிய திட்டமாய் இருந்ததும் (திட்டமாய் மட்டும் இருந்ததும்) தொடர்ந்தது. அடுத்த வருடம், அல்லது செமஸ்டரில் கட்டாயம் சரியாக திட்டமிட்டு படிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடுவேன். அந்த திட்டங்களை நிறைவேற்றியது இல்லை :) . 'பழைய குருடி கதவை திறவடி' கதைதான்.

*மறதி: எனக்கு அறிமுகமானவர்களை, நண்பர்களை, உறவினர்களை எவரையுமோ, அல்லது நிகழ்ச்சிகளையோ மறக்க மாட்டேன். ஆனால் ஆட்களின் பெயர்களை இலகுவாக மறந்து விடுவேன். அது எப்படி பெயர் மட்டும் மறந்து போகின்றது என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் எத்தனை கஷ்டப் பட்டாலும், பெயர் நினைவுக்கு வரவே வராது. "ஒருநாளைக்கு என்னையும் பாத்து, உனக்கு பேர் என்ன என்று கேட்டாலும் கேட்பாய்" என்று நெருங்கிய தோழிகள் கேலி செய்வதும் உண்டு.

* அறியாததை அறிந்ததான உணர்வு: சில புதிய இடங்களுக்கு போகும்போது, அந்த இடத்தை ஏற்கனவே பார்த்தது போன்ற உணர்வு (கனவில் பார்த்திருப்பேன் :) போலும் என்று நினைத்துக் கொள்வேன்), சில புதிய நிகழ்வுகள் நடக்கும்போது, அதே நிகழ்வு முன்பும் அதே மாதிரி நடந்தது போன்ற உணர்வு எல்லாம் வரும்.

மேலே சொன்னவற்றில் சில விசித்திரங்கள் தொடர்கின்றது. சில மறைந்துவிட்டது. சில மறக்கடிக்கப் பட்டு விட்டது. சில விசித்திரங்கள் சொல்ல முடியாது என்பதால் இங்கே விடப் பட்டும் விட்டது :).

அநேகமாக எல்லோரும் தங்கள் விசித்திரங்களை கூறி முடித்து விட்ட நிலையில், இங்கே எனது விசித்திரங்கள் வந்துள்ளன. விசித்திரம், அல்லது விசர்த்தனம்தான். :)