இந்த பதிவை எழுத தூண்டியது என்னுடைய 'என்னைப் பாதித்தவை' வலைப்பதிவின் நாடு நல்ல நாடு - நோர்வே 2 பதிவில் ரவிசங்கர் போட்டிருந்த பின்னூட்டத்தில் இருந்த ஒரு விஷயம்.
"முதல் பனி என்னைக்குமே மறக்காது." உண்மைதான். ஆனா இது சம்பந்தமா எனக்கு இன்னொரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை அங்கே போடாமல், இங்கே 'சும்மா சும்மா' வில் எழுதலாம் னு தோணிச்சு. :)
அந்த நிகழ்ச்சி அம்மாவை குழந்தையாய் பார்த்த நிகழ்ச்சி!
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இந்த நோர்வே நாட்டை காட்டி விட வேண்டும் என்ற ஆசையிலும், நமது குட்டித் தேவதை உலகத்தை பார்க்க ஆவலாய் காத்திருந்த காலமாய் இருந்ததாலும், அவர்களுக்கு டூரிஸ்ட் விசாவுக்கு அனுமதி கேட்டுப் பார்த்தோம். அன்றைய கால கட்டத்தில் இருவருக்கும் ஒரே நேரத்தில் விசா எடுப்பது இலகுவாக இருந்ததில்லை. ஆனால், அதிர்ஷ்ட வசமாக, நாமே எதிர் பார்க்காத நேரத்தில், நம்மிடம் எந்த ஒரு விசாரணையும் கேட்கப்படாமல், அவர்களுக்கு விசா போய் விட்டது. மூன்று மாத விசாவில், ஆவணி மாதத்தில் நோர்வே வந்து சேர்ந்தார்கள்.
நோர்வேயின் அழகை இரசித்தாலும், அப்பாவின் முதல் ஆச்சரியம் பாதையில் ஆட்களை காண்பதே அபூர்வமாய் இருக்கிறது என்பது. பின்ன, இலங்கையை விட நோர்வே பரப்பளவில் கிட்டத்தட்ட 6 மடங்கு பெரியதாக இருந்தும், அதன் சனத்தொகை, 4.4 மடங்கு சிறியதாக இருக்கிறதே. மக்கள் அடர்த்தியைப் பார்த்தால் இலங்கையை விட நோர்வே கிட்டத்தட்ட 25.8 மடங்கு குறைவானது. அப்புறம் இலங்கையுடன் ஒப்பிட்டால் நோர்வேயில் பாதையில் ஆட்களை காண்பது அரிதாகத்தானே இருக்கும். அது மட்டுமா, அவர்கள் இங்கே வந்த காலம் கோடை விடுமுறைக்காலம். அவரவர் குடும்பத்துடன் ஏதோ ஒரு நாட்டுக்கு உல்லாசப் பயணம் போயிருப்பார்கள். இல்லாவிட்டால், உள் நாட்டில் இருப்பவர்களும் கூட எங்காவது கடற்கரை தேடிப் போயிருப்பார்கள். அப்படியே ஊரில் இருப்பவர்களும் அனேகமானோர் காரில் செல்வார்கள். பிறகு எங்கே பாதையில் ஆட்களைப் பார்ப்பது. :)
இருவருமே நோர்வேயை, அதன் அழகை, இங்கிருக்கும் மக்களின் நட்புடன் கூடிய பேச்சை மிகவும் விரும்பினார்கள். ஆனால் இங்கேயே தங்குவதில் இஷ்டமில்லை. எங்களுக்கே எவ்வளவுதான் நோர்வே பிடித்துப் போனாலும், 'சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா' என்றுதானே தோன்றுகின்றது. பிறகு அவர்கள் எங்கே தங்குவது. :)
எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக் கொண்டு போகின்றேன்.
நோர்வேயின் கோடை காலம் முடிந்து, இலையுதிர் காலம் ஆரம்பித்த பின்னர், அனேகமாக அப்போதெல்லாம் ஒக்டோபர், நவம்பர் மாதத்தில் பனிமழை பெய்யத் தொடங்கி விடும். அப்பா, அம்மா நவம்பர் 2 ஆம் திகதி இலங்கை திரும்புவதாக இருந்தார்கள். எனக்கோ, அவர்கள் திரும்பி போக முன்னர் எப்படியாவது பனிமழையை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை. பின்னே நான் அனுபவித்த அந்த இனிய அனுபவத்தை (முதல் பனியை) அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? எனக்கு மட்டுமில்லை. அப்பா, அம்மாவுக்கும் இதே ஆசை. எங்கள் ஆசையை சோதிப்பது போல், ஸ்னோ அடிக்காமலே இருந்தது. எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. அவர்கள் போக இருந்த நாளன்று, அதி காலையில் எழுந்தால் ஸ்னோ மிகச் சிறிய துகள்களாக விழுந்து கொண்டிருந்தது. அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஜன்னலின் வெளியே கையை நீட்டி, அந்த துகள்களை கையிலேந்தி ஆர்வமாய் பார்த்தா. எனக்கோ கவலை, தொடங்கிய ஸ்னோ, சரியாக இருக்காமல் இப்படி இருக்கே என்று. அம்மாவிடம் இது அல்ல உண்மையான ஸ்னோ என்று புரிய வைக்க முயன்று கொண்டிருந்தேன்.
அவர்கள் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று எண்ணிக் கொண்டேன். அவர்கள் புறப்பட்டு, காரில் விமான நிலையத்துக்கு பயணமானோம். 15 நிமிட கார் பயணத்தில், போகும் வழியில் ஸ்னோ வின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது. அம்மா ஒரு குழந்தையின் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதை இரசித்துக் கொண்டே வந்தா. எனக்கு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னும் சரியான பனிமழை பெய்யவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது. (எப்போதான் திருப்தி வரும். ஒன்று கிடைத்தால், அதற்கும் மேலாக எதிர் பார்க்கின்றோம், ஹி ஹி).
விமான நிலையம் போய்ச் சேர்ந்து பயணச் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இன்னும் ஸ்னோ அதிகமாகாதா என்ற எதிர்பார்ப்பில் என் பார்வை முழுவதும் வெளியேதான். அம்மாவும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தா. ஆஹா, நாம் எதிர் பார்த்தபடி, ஸ்னோ பெரு மழையாய் கொட்டத் தொடங்கியது. உடனே நான் அப்பாவையும், அம்மாவையும் வெளியே வந்து விட்டு, பின்னர் உள்ளே போகலாம் என்று சொன்னேன். அவர்களும் வெளியே வந்து ஆசை தீர ஸ்னோவைப் பார்த்தார்கள். அம்மா குழந்தையில் குழந்தையாகி, ஸ்னோ வை கையில் பிடிப்பதும், கீழே கொட்டிய ஸ்னோவை தொட்டு அழைந்து பார்ப்பதுமாய் இருந்தது என்னை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. கடைசியில் எப்படியோ ஸ்னோ வை காட்டிய சந்தோஷம் (ஏதோ நானே அவர்களுக்காய் ஸ்னோ கொட்டியது மாதிரி :).
பின்னர் நேரமாகி விட்டதால், அவர்கள் உள்ளே போனதும், நாங்கள் வழியனுப்பி விட்டு, வீடு வந்து விட்டோம். அப்பா, அம்மா அத்தனை நாள் இருந்து விட்டு போனதால் வீட்டில் போயிருக்க பிடிக்காமல், வேறு எங்கோ போய் விட்டேன். அன்று முதல் பனி காரணமாய் எல்லா விமானங்களும் பிந்தியதால், அவர்கள் 2 மணி நேரம் பிந்தி புறப்பட்டதும், அதனால் அடுத்த விமானத்தை Amsterdam இல் தவற விட்டதும், பின்னர் Egypt க்கு அவர்களை வேறு விமானத்தில் அவர்கள் ஏற்றி விட்டு, அங்கேயும் போய் போனதும் தனிக் கதை. :)
அதன் பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை இங்கே 6 மாத விசாவில் வந்ததும், முழுமையாக ஸ்னோவை பார்க்க முடிந்ததும், ஐரோப்பிய நாடுகளை சுற்றிப் பார்த்ததும் நடந்தது என்றாலும், அந்த முதல் பனியில் அம்மாவிடம் நான் பார்த்த குழந்தைத்தனமும், குதூகலமும், முகத்தின் பூரிப்பும் வாழ்நாள் முழுமைக்கும் மறக்காது. :)
சம்பந்தமே இல்லாமல் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் "முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே.... விழுகிறதே உயிர் நனைகிறதே" பாடல் நினைவுக்கு வருகின்றது. :)
அம்மாவே குழந்தை!
Labels: நினைவில் நின்றவை
Subscribe to:
Post Comments (Atom)
Comment Form under post in blogger/blogspot