எனது ஆசிரியர்!

ஆட்டோகிராஃப் இன் கதை சொன்னேன்தானே. அங்கே பக்கங்களைப் ஒவ்வொன்றாக புரட்டிச் செல்கையில், அழகான கையெழுத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆசிரியர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அவரைப் பற்றி இத்தனை நாளும் எப்படி நினைக்காமல் இருந்துவிட்டேன் என்று ஆச்சரியத்துடன் எண்ணிப் பார்க்கிறேன்.

அந்தப் பாடசாலையில், நாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து வகுப்பேற்றம் செய்யப்பட்டு, புதிய வகுப்புக்கு ஒரு தை மாதத்தில் போகிறோம். எங்களுக்கு ஒரு புதிய வகுப்பாசிரியர் வரப் போகிறார் என்று சொல்லியிருந்தார்கள். வகுப்பிற்கு மட்டும் அவர் புதியவர் அல்ல, அந்தப் பாடசாலைக்கே புதிதாக வருகிறார் என்றதும், அனைவரிடமும் அவரைப் பார்ப்பதில் அதீதமான ஆவல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

முதலாம்நாள், முதலாம் பாடம், மிகவும் ஆர்வத்துடன், யார் வந்து நமது வகுப்பினுள் நுழையப் போகிறார் என்று காத்திருந்தோம். அந்த ஆசிரியர் மெதுவாக வந்து வகுப்பறையினுள் நுழைந்தார். மெல்லிய உருவம், பொது நிறத்தைக் கொண்டவர். சுமாரான உயரம். ஆனால், அவர் கண்களில் மட்டும் ஒரு ஒளி. அத்தனை மாணவர்களையும் கட்டிப் போடக் கூடிய ஏதோ ஒரு கவர்ச்சி. அவர் வகுப்பில் வந்து பேச ஆரம்பித்ததும், அனைத்து மாணவர்களும், ஏதோ ப்ரேயரில் இருந்ததுபோல், ஒரு சிறு சத்தமும் செய்யாமல் கேட்டுக்கொண்டு இருந்தோம். அன்று அவர் எந்த பாடமும் நடத்தவில்லை. முதல் பாடம் முழுமையும் நம்முடன் கதைத்தார்.

அவர் அப்படி என்ன கதைத்தார் என்று கேள்வி எழுகிறதா? நம்முடன் ஒரு நண்பனைப் போல், சகோதரன்போல், இதமாக, இனிமையாக பல விஷயங்களையும் கதைத்தார். அதுவரை காலத்தில் (ஏன் அதற்குப் பிறகும் கூட) அப்படி ஒரு ஆசிரியரை சந்தித்திருக்கவில்லை. மாணவர்களுடன் பல ஆசிரியர்கள் நட்புடன் பழக விரும்புவதேயில்லை. அப்படி பழகினால், மாணவர்கள் தம்மை மதிக்க மாட்டார்கள் என்பது அவர்களது எண்ணம். வேறு சில ஆசிரியர்கள் நட்புடன் இருக்க விரும்பினாலும், அதை காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவரோ மிகவும் நட்புடன் பழகுவார்.

நாம் அனைவரும், அவர்மேல் அளவு கடந்த அன்பும், அதீத மரியாதையும் வைத்திருந்தோம் என்பதுதான் உண்மை. காரணம் எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த அந்த ஒரு வருடமும், அவர் எங்களுடன் பழகிய விதம், அப்படி நம்மை அவர்பால் இழுத்து வைத்திருந்தது. அவரது குழந்தையின் பிறந்த நாளுக்கு நம்மைத்தான் முக்கிய விருந்தினராக அழைத்திருந்தார் என்பதே நமக்கு பெருமையாக இருந்தது. அவரது வகுப்பு மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அத்தனை பெருமை நமக்கு. அவரால் நமது வகுப்பிற்கே ஒரு தனி மரியாதை இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.

அவர் எனது ஆட்டொகிராஃப் இல் எழுதியிருப்பதை வாசிக்க ஆரம்பிக்கையிலேயே, அந்த வரிகள் மனப்பாடம் செய்தது போல் எனக்கு வந்தது. அது என்னவென்றால்.....

அன்புத்தங்கை கலா!

இறை நம்பிக்கையும், உண்மையும் மனித வாழ்வினைச் சிறப்புடன் பார்க்க உதவும் இரு கண்கள். இவைகட்கு ஒளி கொடுப்பது அன்பு. எனவே அன்பெனும் ஒளிகொண்டு, இறை நம்பிக்கை, உண்மை எனும் இரு கண்களாலும் மனித வாழ்க்கைப் பாதையில் நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி வீறுநடை போடுங்கள். வாழ்வின் வெற்றி உங்களுக்கே!

அண்ணன்,
அ.மு.அருணாசலம்.

இதை வாசிக்கும்போது எனது கண்கள் பனித்தன. எத்தனை அருமையாக ஒரு அண்ணனாக இருந்து இதை எழுதியிருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியும். ஆனால் அங்கே எந்த இடம் என்பது நினைவில் இல்லை. அதை விலாசத்தில் எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால், அங்கேயும் 'நு/கைலன்ஸ் கல்லூரி, ஹட்டன்' என்றுதான் உள்ளது.

நாங்கள் இடம் மாறி யாழ் வந்த பின்னர் சில காலம் நானும் அவருக்கு கடிதம் போட்டிருக்கிறேன். அவரும் பதில் போட்டிருந்தார். ஆனால் எப்போது, எப்படி அந்த தொடர்பு விடுபட்டது என்பது சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தொடர்பு நின்று போனது.

அவருக்கு நம்மையெல்லாம் நினைவிருக்குமா என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் எம்மைப் போல் எத்தனை மாணவர்கள் வந்து போயிருப்பார்கள். எனது அப்பாவும் அதே பாடசாலையில் ஆசிரியராக கடமை ஆற்றியதால், ஒருவேளை நினைவில் வைத்திருப்பாரோ, என்றால் அதற்கும் சாத்தியமில்லை. காரணம், அவர் அந்த பாடசாலைக்கு வந்த வருடத்தில் அப்பா, ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குப் போய் விட்டார். அருணாசலம் மாஸ்டர் நமக்கு எடுத்த பாடம் கணக்கு. அதில் நான் நன்றாகவே செய்வதால், ஒருவேளை என்னை நினைவில் வைத்திருப்பாரோ என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் அப்படி எத்தனை பேர் வந்து போயிருப்பார்கள். மேலும் எல்லோரையும் கணக்கை நன்றாகச் செய்யச்செய்யும் வல்லமை அவரிடம் உண்டே.

அவர்பற்றி அறிய மிகவும் ஆவலாயுள்ளது. ஒருவேளை இதை வாசிப்பவர்களில் அவரது உறவினர்களோ, அவரைத் தெரிந்தவர்களோ, ஏன் அவரது பிள்ளைகளோ கூட இருக்கக் கூடும். அப்படி யாராவது இருந்தால், தயவு செய்து எனக்கு அறியத் தாருங்கள்..

Autograph!

கடந்த வருடம் கோடை விடுமுறைக்கு இலங்கைக்குப் போயிருந்தோம். அப்போது யாழ்ப்பாணமும் போய் வந்தோம். அப்போது எனது பழைய ஆட்டோகிராஃப் கையில் கிடைத்தது. நமது வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் கிளம்பிய பின்னர், எங்களது வீட்டை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது என்று முடிவெடுத்தபோது, தம்பி அங்கிருந்த சில பொருட்களை தன்னுடன் எடுத்துச் சென்று வைத்திருந்தார். அதில் ஒன்று இந்த ஆட்டோகிராஃப்கள். என்னிடம் இருந்த 4 ஆட்டொகிராஃப்களில், இரண்டைக் காணவில்லை. இரண்டு மட்டுமே அங்கே இருந்தது. இரண்டு தொலைந்து விட்டாலும், தம்பி மற்ற இரண்டையாவது மிகவும் பொறுப்புடன் வைத்திருந்து என்னிடம் தந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு அப்போது அதை பொறுமையாக வாசிக்க முடியாது என்பதால், அவற்றை, அப்படியே என்னுடன் இங்கே எடுத்து வந்திருந்தேன்.

இங்கு வந்து சேர்ந்ததும், பெட்டிகளை அடுக்கியபோது, இவை மீண்டும் கையில் கிடைத்தது. ஆறுதலாக இருக்கும் வேளையில் வாசிக்கலாம் என்று, அவற்றை ஒரு மேசை இழுப்பறையினுள் போட்டேன். பின்னர் அதை மறந்தே போனேன். இதோ ஒரு வருடத்துக்கு மேல் முடிந்து விட்டது. இந்த வாழ்க்கையின் அவசரகதி நிலைதான் இதற்குக் காரணம் போலும் என்று எண்ணியபடியே அந்த ஆட்டொகிராஃப் இல் ஒன்றை எடுத்துப் பார்த்தேன். அதன் நிறம் மங்கி, தாள்களின் நிறம் பழுப்பாகி, சோபையிழந்து காணப்பட்டது. பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். கவர் தனியாக கழன்று வந்திருந்தது. உள்ளேயும் சில பக்கங்கள் கிழிந்திருந்தது. ஒரு காலத்தில், பொக்கிஷமாக நான் பாதுகாத்து வைத்த பொருட்களில் ஒன்றான இந்த ஆட்டோகிராஃப் க்கு நேர்ந்த கதியை எண்ணிப் பார்க்கிறேன்.

அந்த ஆட்டொகிராஃப் நான் Hatton Highlands College (இலங்கையில் மலை நாட்டிலுள்ள ஒரு பாடசாலை) இல் படித்துவிட்டு, அப்பா, அம்மாவின் இடமாற்றம் காரணமாக யாழ்ப்பாணத்துப் போக வேண்டி வந்த சூழ்நிலையில் அங்கிருந்தவர்களிடம், அவர்களது நினைவாக வாங்கிய ஆட்டோகிராஃப். அதில் எனக்குப் பிடித்த ஆசிரியர்கள், சினேகிதிகள் என்று பலரும் கையொப்பமிட்டிருந்தார்கள்.(அவர்களில் குறிப்பாக ஒரு ஆசிரியர்பற்றி நிச்சயம் இங்கே சொல்லியே ஆகவேண்டும். அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்). அத்துடன் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி வகுப்பிலிருந்த அனைவருமே அதில் கையொப்பமிட்டிருந்தனர். அங்கிருந்து புறப்பட வேண்டி வந்த நாளில் நான் அழுத அழுகையை எண்ணிப் பார்க்கிறேன். அந்த சிறிய வயதில், ஏதோ அந்த சினேகிதிகளை எல்லாம் பிரிந்து விட்டால், எனது வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்பதுபோல், அப்படி அழுதேன். ஆனால், இப்போது நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. காலம்தான் நமது வாழ்வில் எத்தனை மாற்றங்களை செய்து விடுகிறது.

நெருங்கிய சினேகிதிகளை நான் மறக்கவில்லைத்தான் என்றாலும், அவர்களது தொடர்பு எல்லாம் இப்போது முற்றாக நின்று போய் விட்டது. அதில் பலரும் எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட இப்போது தெரியாது. அப்போது மிக மிக முக்கியமாக மனதிற்குப்பட்ட அந்த நட்பு, இப்போது முக்கியத்தை இழந்துபோய் இருக்கிறது. அங்கிருந்து நான் புறப்பட்ட சிறிது காலத்திற்கு, கிழமைக்கு ஒரு கடிதமாவது எனது நெருங்கிய தோழிகளுக்குப் போடுவேன். அவர்களும் அடிக்கடி போடுவார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களின் நீள, அகலம் இப்போதும் மனதில் வருகிறது. எத்தனை நீளமான கடிதம். பெரிய பேப்பரில் 4, 5 பக்கங்கள் வரை கூட கடிதங்கள் நீண்டிருக்கின்றன. அப்படி என்னதான் எழுதிக் கொண்டோமோ, இப்போது நினைவில் இல்லை. அதிலும் உஷா என்ற எனது நெருங்கிய தோழியின், அழகான, குண்டுக் குண்டு எழுத்துக்களைத் தாங்கி வரும் அந்த நீளமான கடிதங்களை வாசிப்பதே இனிமையாக இருக்கும். எனக்குப் புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால், நான் தவறாது கடிதம் போடுவேன். அவர்களிடமிருந்து வரும் கடிதங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து ஒரு கால கட்டத்தில் நின்றே போய் விட்டது.

அவர்களை எல்லாம் விட்டுப் பிரிந்த பின்னர், உஷா என்ற தோழியை மட்டும் இரு தடவைகள் சந்திக்க முடிந்தது. இன்னொரு தோழி பேபி இறந்துவிட்டாள் என்பதை உஷா மூலம் அறிந்துகொண்டேன். அவளின் இறப்பு ஒரு அதிர்ச்சி நிறைந்தது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லலாம். மற்றவர்கள்பற்றி உஷாவுக்கே கூட அதிகமாய் தெரியவில்லை. உஷாவும் தற்போது எங்கே என்று தெரியவில்லை.

இப்போது இந்த ஆட்டோகிராஃப் ஐப் பார்க்கையில் அதில் கையொப்பமிட்டுள்ள ஒரு சிலரை நினைவில் கூட இல்லை என்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை..

மழை!

என்ன இது... 'மழை ஷ்ரேயா' வுக்குப் போட்டியாக இங்கே மழை பற்றிய பதிவா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். இது சும்மா, இங்கே நமது இடத்தில் பெய்திருக்கும் மழை பற்றிய பதிவுதான்.

வழக்கமாக எமது வீட்டு ஜன்னல் இரவு நேரங்களில்(லும்) கொஞ்சமாய் திறந்தே இருக்கும். ஆனால் நேற்றிரவு குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததனால், ஜன்னல்கள் அனைத்தையும் முழுமையாகப் பூட்டி விட்டே படுத்தோம். நமது இடத்தில் நேற்றிரவெல்லாம் மழை பெய்து தள்ளியிருக்கிறது. ஆனால் நமக்கு எதுவுமே தெரியாது. ம்ம்ம். இரவு சுகமான உறக்கத்தில் இருந்த நாம், காலையில் எழுந்து பார்த்தபோது மழை பெய்துகொண்டிருந்தது. ஜன்னலூடாக வெளியே பார்த்தால், வீட்டிற்கு முன்னால், வீதியில் பல பெரிய வெள்ளை நிற பிளாஸ்டிக் பைகளில் மூட்டைகளைப் போட்டு வைத்திருந்தார்கள். எதற்கு என்று யோசித்துப் பார்த்தபோதுதான் புரிந்தது, மழைத் தண்ணீர் வழிந்து வீட்டுப்பக்கம் வந்து விடாமல் போட்டிருக்கிறார்கள் என்று.

அப்போதும்கூட கடுமையான மழை பெய்திருப்பது தெரியவில்லை. இன்று மழை என்றபடியால், எனது நடைப்பயணத்தை ஒத்தி வைக்கும்படி கணவர் கூறினார். நானோ, மறுத்துவிட்டு, ரெயின்கோட் சகிதம் நடந்தே வேலைக்கு புறப்பட்டுவிட்டேன். வெளியே வந்தால், இந்தக் குளிரிலும், மழையிலும் சிலர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருப்பதைக் காண முடிந்தது. நமது வீட்டுப்பக்கம் பெரிதாக மழையின் பாதிப்பு எதையும் காண முடியவில்லை. அப்படி இருந்தும், முன்னேற்பாடாக இவ்வளவு வேலைகள் செய்யப்படும் இடத்தில் இருக்கிறோமே என்பது மனதில் ஒரு சிறு திருப்தியைத் தந்தது. அதே வேளை, இவ்வளவு மழை பெய்ததோ, இத்தனை பாதிப்பு நடந்ததோ எதையுமே அறியாமல், நாம் சுகமாக நித்திரையில் இருந்த இந்த குளிர் இரவில், இந்த மழையில், சிலர் நமக்காக கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்களே என்பது உறுத்தலாகவும் இருந்தது.

அதன் பின்னர் செய்திகளை எல்லாம் அறிந்தபோது மனதுக்கு கஷ்டமாகவும் இருக்கிறது. இயற்கையின் அழிவுகள்தான் எத்தனை ரூபத்தில்? :(

இங்கே வேலைக்கு வந்த பின்னர்தான் மழையின் பாதிப்பு பற்றிய செய்திகளை வாசிக்கவும், கேட்கவும் முடிந்தது. (வேலையில் இருந்துதானே blog எழுத முடியும், பின்னே வீட்டிலிருந்தா எழுத முடியும்?). நேற்றைய தினம் மட்டும் சராசரியாக 100 - 150mm மழை இந்தப் பகுதியில் பெய்திருப்பதாக அறியப்படுகிறது. ஒரு சில இடங்களில் கடந்த ஒரு தினத்தில் மட்டும் 179mm மழை பெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சில இடங்களில், பாலங்களுக்கு மேலாக தண்ணீர் வெள்ளமாய் பாய்வதையும், பள்ளமான பகுதிகளில் வெள்ளம் வீதிகளில் பாய்ந்து கொண்டிருப்பதையும் காண முடிவதாகக் கூறுகிறார்கள்.

மிக அண்மையாக உள்ள பிரதேசமொன்றில், கடும் மழையினால் ஏற்பட்ட மண் சரிவினால், சில வீடுகள் உடைந்து விழுந்துள்ளது. இதில் ஒருவர் இறந்துள்ளார். மற்றும் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் குழந்தைகள் நால்வரும், பெரியவர்கள் ஐவரும் அடங்குகின்றனர். இந்த இடங்களில், தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.

சரியாக நீந்தப் பழகாமல் விட்டுவிட்டேன், பார்க்கலாம்..