இப்படியும் சிலர்!!

சில நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ கிளிப்பிங் பார்க்க கிடைத்தது. அதில் அமெரிக்காவில் வீதியில் போகும், நிற்கும் ஒரு சிலரை (இனபேதமின்றி எல்லா இனத்தவரையும்) ஒருவர் ஒரு கேள்வி கேட்கிறார். அவர் கையில் ஒரு உலக வரைபடமும் இருக்கிறது. அந்த வரைபடத்தில் வேண்டுமென்றே நாடுகளின் பெயர் பிழையாக எழுதி வைக்கப்பட்டிருந்தது.

அவர் ஒவ்வொருவரிடமும் கேட்கும் கேள்வி "போர், அச்சுறுத்தல் என்பவற்றின் அடிப்படையில் அடுத்ததாக தாக்கப்படவேண்டிய, அல்லது கைப்பற்றப்பட வேண்டிய நாடு எது?" என்பதாகும். அங்கே பதிலளித்த ஒவ்வொருவரும், தமது இஷ்டத்துக்கு ஒவ்வொரு நாட்டை சொல்கிறார்கள். அதில் ஒருவர் கூட 'நாம் எந்த நாட்டையும் கைப்பற்றாமலோ அல்லது தாக்காமலோ இருப்போமே' என்ற பதிலை கொடுக்கவில்லை. ஒருவேளை அப்படி வந்த பதில்கள் அந்த வீடியோ பதிவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதா தெரியவில்லை.

ஒரு பெண்மணி சொல்கிறார் செளதி அரேபியா. இன்னொரு ஆண் சொல்கிறார் மத்திய கிழக்கு நாடுகளில் ஏதோ ஒன்றாம். இன்னொருவர் சொல்கிறார் எல்லா மத்திய கிழக்கு நாடுகளும் என்று. அவர் சொன்னதோடு நில்லாமல் மத்திய கிழக்கு நாட்டு மக்களுக்கு கெட்ட வார்த்தையால் திட்டவும் செய்கிறார். இப்படியே வேறு வேறு ஆட்களால் சொல்லப்பட்ட நாடுகள் சில இத்தாலி, பிரான்ஸ், ஈரான், கொரியா என்பன. இன்னொருவர் சொல்கிறார் கியூபா, இந்தியா, பாகிஸ்தான் எல்லாமுமாம். வேறொருவர், தன்பாட்டுக்கு நாடுகளை அடுக்கிக் கொண்டே போகிறார். எப்படி தெரியுமா... ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, பிரேசில், கனடா.. இன்னும் சொல்லியிருப்பார் போலிருந்தது. காரணம் அவர் அங்கே நிறுத்திய மாதிரி தெரியவில்லை, கமரா அவரிடம் இருந்து வேறு பக்கம் போய் விட்டதாகவே தோன்றியது.

அந்த நாடுகளை அவர்கள் தெரிவு செய்ய காரணம் என்ன என்று சிலரிடம் கேட்டபோது ஒவ்வொருவர் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள். கொரியா தாக்கப்பட வேண்டும் என்று சொன்ன ஒருவர் சொல்கிறார் அங்குள்ளவர்களின் மனோபாவம் பிரச்சனையானதாம். வடகொரியா என்று சொன்ன ஒருவர் சொல்கிறார் அணுஆயுத காரணங்களுக்காக அந்த நாடு தாக்கப்பட வேண்டுமாம்.

இன்னொரு இளம்பெண் முதலில் ஈரான் என்று சொன்னார். ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அங்கே வெகு விரைவில் ஒரு புரட்சி வரும் என்று எதிர் பார்க்கிறாராம். அதற்கு பிறகு அதே பெண் சொல்கிறார் இலங்கையும் கைப்பற்றப்பட வேண்டிய நாடு என்று தான் நினைக்கிறாராம். அவர் கையில் ஒரு இலக்கத்தை கொடுத்து, அவரை வரை படத்தில் இலங்கை இருக்குமிடத்தில், அந்த இலக்கத்தை பொருத்தும்படி கேட்டபோது, அவர் கொஞ்சம் தடுமாறிக் கொண்டு இருந்தார். அருகிலிருந்த இன்னொரு இளம்பெண் சரியான இடத்தை காட்டினார். பின்னர் அந்த இடத்தில் இலக்கத்தை பொருத்தி விட்டு, அந்த முதல் இளம்பெண் சொல்கிறார், தான் அதுபற்றி கேள்விப்பட்டு இருக்கிறாராம்.

சரி, இவர்களாவது இடத்தை சரியாக காட்டினார்கள். வேறு சிலரிடம் இதேபோல் இலக்கம் கொடுக்கப்பட்டு, அவர்கள் எந்த நாட்டை சொன்னார்களோ, வரைபடத்தில் அந்த நாட்டில் இலக்கத்தை பொறிக்கும்படி சொன்னபோது நடந்ததுதான் இன்னும் வேடிக்கையாக இருந்தது. அவர்கள் சொன்ன நாடுகள் எந்த இடத்தில் இருக்கிறதென்பதே தெரியாமல், வரைபடத்தில் தவறாக குறிப்பிட்டிருந்த இடத்தில் இலக்கத்தை பொருத்தினார்கள். அவுஸ்திரேலியாவை ஒருவர் ஈரான் என்று சுட்டிக் காட்டினார். நியூசிலாந்தை ஒருவர் பிரான்ஸ் என்று காட்டுகிறார். தாங்கள் எந்த நாட்டினால் அச்சுறுத்தல் இருக்கிறதென்றும், அந்த நாட்டை தாக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த நாடு உலகத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை அவர்களுக்கு.

இதை விடவும் வேறு ஒரு வேடிக்கையும் நடந்தது. ஒருவரிடம் படம் காட்டப்பட்டபோது அவுஸ்திரேலியாவை தென்கொரியா என்றும், அவுஸ்திரேலியாவுக்கு அண்மையாக இருக்கும் கடலை வடகொரியா என்றும் வரைபடத்தில் எழுதி இருந்தார்கள். அதைப் பார்த்து கதைக்கும் ஒருவர், தென்கொரியாவையும் வடகொரியாவையும் தவறாக தொட்டுக் காட்டியபடியே சொல்கிறார் வட கொரியா, தென்கொரியாவை விட பெரியது என்று தற்போது உணர்ந்திருக்கிறார்களாம். கடல் எது நிலம் எது என்பதுகூட தெரியவில்லை. அது மட்டுமல்ல, வரை படத்தில் திசைகள் எந்தப் பக்கம் என்று தெரியாமலே கூட சிலர் சுட்டிக் காட்டினார்கள். ஒருவேளை சரியாக இடங்களைக் காட்டியவர்கள் இந்த வீடியோ பதிவிலிருந்து நீக்கப்பட்டிருக்க கூடும்.

இதை பார்த்தபோது எனக்கு சிறு வயதில் நடந்த வேறு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அந்த நிகழ்ச்சிக்கும், இந்த வீடியோ பதிவுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா என்பது தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன். (எழுதுகிற மூடில இருக்கும்போது எழுதி விடவேண்டுமில்லையா, அதுதான்).

நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது நமக்கு வகுப்பாசிரியை சொலமன் டீச்சர். கணவரை இழந்தவர். ஆனாலும் மாணவர்களுடன் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. பல நாட்களாக நானும் எனக்கு அருகில் இருக்கும் ஒரு சிறுமியும் பேசிக் கொள்வதில்லை. அவளது பெயர்கூட ஒரு வித்தியாசமான பெயர், அடைக்கலம். எதற்காக நான் அவளுடன் கோபமாயிருந்தேன் என்பது தற்போது சரியாக நினைவிலில்லை. எனது மிக நெருங்கிய சினேகிதிக்கும், எனக்குமிடையில் அடைக்கலம் அமர்ந்திருந்ததால் அப்படி நான் கோபம் கொண்டிருந்தேனோ என்று இப்போது தோன்றுகிறது. (சே, எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறேன் அப்போது). இதை சொலமன் டீச்சர் அறிந்ததும், இருவரையும் கூப்பிட்டு நிறைய புத்திமதி எல்லாம் சொல்லி, நாமனைவரும் நட்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லி, அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவதன் அவசியத்தையும் சொல்லி, ஒரு மாணவியை அழைத்து, ஜூஸ் வாங்கி வரச் செய்து, இருவரையும் ஒருவருக்கொருவர் கொடுக்கச் செய்து, நம்மை நேசமாக்கி வைத்தார்.

அவர்தான் எங்கள் வகுப்புக்கு ஆங்கிலபாடம் எடுத்தார். அது மட்டுமல்ல, சொலமன் டீச்சர்தான் நமது பாடசாலையில் வரும் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு நம்மை தயார்ப்படுத்துவார். ஒரு தடவை சமையலறையில் இருக்கும் பொருட்கள் (அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை, இன்னும் பலவகையான பாத்திரங்கள்) எல்லாம் ஆளுக்கொன்றாய் வைத்துக் கொண்டு நடித்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடல் முழுமையாக நினைவில் இல்லை. ஆனால் தொடக்கம் நன்றாகவே நினைவில் இருக்கிறது.

We don't want to march like an infantry
Ride like a cavalry,
Shoot like an artillery,
We don't want to fly over Germany,
We are the kitchen band.....
We are the kitchen band.....

இப்படிப் போகும் அந்தப் பாடல். இதன் அர்த்தம் என்ன என்று அப்போது புரிந்து கொண்டுதான் பாடினோமா என்று தெரியவில்லை. இப்போது யோசித்துப் பார்க்கிறேன். இந்தப் பாடல் சொல்ல வந்தது என்ன? போர்கள், யுத்தங்கள் வேண்டாமே, சமாதானத்தில் சந்தோஷமாய் இருப்போமே என்பதுதானே? ஜேர்மனி நாடு மட்டும் இந்த பாடலுக்குள் வந்த காரணம் என்னவாயிருக்கும்? இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு இருந்த முக்கிய பங்கினால் வந்திருக்குமோ? அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

சினேகிதியின் கதி!

[QUOTE]இன்னொரு தோழி பேபி இறந்துவிட்டாள் என்பதை உஷா மூலம் அறிந்துகொண்டேன். அவளின் இறப்பு ஒரு அதிர்ச்சி நிறைந்தது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லலாம்.[/QUOTE]

தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரே வகுப்பில் நாங்கள் தோழிகள் ஐவர் இருந்து வந்தோம். இடை இடையே ஏதாவது கோப தாபங்கள், சின்ன சின்ன சண்டைகள் இந்த ஐவருக்கிடையேயும் வராமல் இருக்காது. அப்படி வந்தாலும் ஒரு சில மணி நேரங்களில், மிஞ்சிப் போனால் ஒரிரு நாட்களில் அந்த குழப்பம் தீர்ந்து ஒன்று கூடி விடுவோம். இருவருக்குள் குழப்பம் வந்தால், மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது, இந்த கோபம் காணாமல் போய் விடும்.

இந்த ஐவரில் ஒருவரின் பெயர்தான் பேபி. அவள் வீட்டில் அவள் எட்டாவது கடைசிப்பிள்ளை. அப்பா, அம்மா, அண்ணாமார், அக்காமார் எல்லோருக்கும் செல்லக் குழந்தை. அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். பாடசாலைக்கு தனது புதிய புதிய விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் எடுத்து வருவாள். எல்லோருமாக விளையாடுவோம்.

ஒருதடவை அவளுக்கு சமையல் விளையாட்டுக்கு அவர்கள் வீட்டில் குட்டி குட்டி பாத்திரங்கள் வாங்கி கொடுத்திருந்தார்கள். அதை அவளும் தனது ஸ்கூல் பாக்கில் போட்டு எடுத்து வந்திருந்தாள். ஏதாவது ஃபிரீ பீரியட் வராதா, அவற்றை வைத்து விளையாட என்று பார்த்துக் கொண்டே இருந்தோம். நல்ல வேளை ஒரு பாடத்துக்கு ஆசிரியர் வரவில்லை. அப்படி வராவிட்டாலும், வேறு யாராவது ஆசிரியர் வந்து சிலசமயம் எம்மை சங்கடத்தில் மாட்டி வைப்பார். நல்ல வேளையாக அன்று யாரும் அந்த வேண்டாத வேலையை செய்யவில்லை, ஹி ஹி.

நமது மேசைக்கு கீழே புத்தகங்கள் வைக்க கூடிய மாதிரி திறந்த பெட்டி மாதிரி (drawer?) ஒரு அமைப்பு இருந்தது. அந்த வகுப்பில் மூன்று மூன்று பேராக இருக்கும் மேசைகள். எங்களில் ஐந்து பேரில் மூவர் ஒரு மேசையிலும், மற்ற இருவர் அடுத்த மேசையிலும் இருப்போம். அந்த மேசையில் இருக்கும் மூன்றாமவர், நம்மை எல்லாம் விட ஒரு வயது கூடியவர். அவர் எமது குரூப்பில் இல்லை, அவரது குரூப் தனி. ஆனாலும் நல்லவர். ஒரு மேசையில் இருப்பவர்கள் மூவரும் ஒரு வீட்டினர் என்றும், அடுத்த மேசையில் இருந்த இருவரும் அவர்களது உறவினர் என்று பிரித்துக் கொண்டோம். ஒருவர் வீட்டுக்கு மற்றவர்கள் விசிட் போகப் போகிறோமாம். அதுபற்றி கடிதம் போடுவோம். நமது குரூப்பில் இல்லாதவர்தான் பியோன், அதாவது நமது கடிதம் எடுத்துச் சென்று அவர்களிடம் கொடுப்பார்.

அந்த விசிட்டுக்கு அந்த வீட்டில் சமையல் தடபுடலாய் நடக்கும். எதை சமைப்பது என்று கேட்கிறீர்களா? முதல் நாளே பேசி வைத்துக் கொண்டபடி, சாப்பிடக் கூடிய பொருட்கள், அவரவர் இஷ்டத்துக்கு எடுத்து வந்திருந்தோம். அந்த சமையல் பொருட்களில் கொய்யாக்காய், பிஞ்சு போஞ்சிக்காய் (பச்சையாய் சாப்பிடக் கூடியது), கரட் போன்ற பொருட்கள் அடக்கம். அவர்கள் சமைப்பார்கள். நாங்கள் விருந்துக்குப் போய் சாப்பிடுவோம். ஒரு மேசையிலேயே ஐவரும் நெருக்கி அடித்து உட்கார்ந்துதான் விருந்துச் சாப்பாடு. பிறகு அவர்களை நமது வீட்டுக்கு வரும்படி அழைப்பு வைத்து விட்டு வருவோம். பாத்திரங்கள் இடம் மாறி நமது வீட்டு கிச்சனுக்கு (அதுதான் மேசைக்கு கீழே, ஹி ஹி) வந்து விடும்.

இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் நுழைந்ததும், அப்படி எல்லோரும் ஒரு மேசையில் உட்கார்ந்து என்ன செய்கிறோம் என்று கேட்டதும், இனிமேல் எந்த விளையாட்டுப் பொருட்களும் ஸ்கூலுக்கு எடுத்து வரக் கூடாது என்று சத்தம் போட்டதும் தனிக் கதை. அவர் சொன்னதுக்காக நாங்கள் கொண்டு போகாமல் விட்டு விட முடியுமா என்ன? அது எல்லாம் தொடர்ந்தும் நாங்கள் விளையாடிக் கொண்டுதான் இருந்தோம்.

சரி, அந்த பேபிபற்றி எழுத வந்து எதை எதையோ சொல்கிறேன் நான். என்ன செய்வது பழைய நினைவுகளுக்குப் போனால், இப்படித்தான். ஒன்றுடன் ஒன்று தொடுத்துக் கொண்டு, மாலை கோர்த்தது மாதிரி, ஒராயிரம் நினைவுகள் வரும்.

நான் சொல்ல வந்தது அந்த பேபிக்கு நடந்த கொடுமை பற்றியதாச்சே. நான் அந்த ஸ்கூலில் இருந்து விலகியதும், புதிய இடத்துக்குப் போனதும், அதன் பிறகு சில காலத்தில் அவர்களது தொடர்பு விட்டுப் போனதும் பற்றித்தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே. ஒரு சினேகிதியின் மூலம் நான் அறிந்த சோகக் கதைதான் இது. நான் அந்த ஸ்கூலில் இருந்து விலகி வந்து பல காலத்தின் பின்னர், அந்த விஷயத்தை எனது அடுத்த சினேகிதி மூலம் அறிந்த போது எனக்கு நம்பவே முடியவில்லை. அத்தனை செல்லமாக வளர்ந்த பேபிக்கா இந்தக் கதி என்று மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, என்னை மிகவும் பாதித்தது. இவற்றிற்கு எல்லாம் காரணம் இந்த காலத்திலும் மக்கள் மத்தியில் இருக்கும் சில மூட நம்பிக்கைகள். அதுவும் சில சமய சம்பந்தமான மூட நம்பிக்கைகள் என்பதுதான் வருந்தக் கூடிய விடயம்.

பேபி மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதாலேயோ என்னவோ, அவள் படிப்பில் பெரிய ஆர்வமில்லாது இருந்தாள். விளையாட்டு, விளையாட்டு, எந்த நேரமும் விளையாட்டுத்தான். அதனால், அவளால் படிப்பிலும் கெட்டிக்காரியாக வர முடியவில்லை. அவள் அதைப் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. விளையாடுவதற்காகவே ஸ்கூலுக்கு வருவதுபோல் வந்து போவாள்.

அவளுக்கு மிக இளம் வயதிலேயே திருமணமும் நடந்து விட்டதாம். திருமணம் முடிந்த சில காலத்தில் ஏதோ காரணத்தால், பேபிக்கு மன நிலை பாதிப்படைந்திருக்கிறது. அத்துடன் அவளுக்கு உடல் சுகவீனங்களும் வர ஆரம்பித்திருக்கிறது. அந்நிலையில் இதற்கெல்லாம் காரணம் ஒரு தீய சக்திதான் என்று நம்பிய அவர்களது உறவினர்கள், அவளை வைத்தியரிடம் அனுப்பாமல், அவர்களது மதம் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் என்ன மதம் என்பது அவசியமற்றது என நினைக்கிறேன். ஏனென்றால் வேறு பட்ட மதங்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவரும் இது ஒரு தீய சக்திதான் என்றும், இதற்கு தமது மத முறைப்படி சிலவற்றை செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

பேபியை அதற்குப் பிறகு, வீட்டை விட்டு வேறு ஒரு இடத்தில் ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகவும், அவளை அடித்து எல்லாம் துன்புறுத்தியதாகவும் கூட சொல்கிறார்கள். ஒரு நிலையில் அவளால் கதைக்க கூட முடியாமல் போய் விட்டதாகவும், இப்படியே அவளது நிலை மிகவும் மோசமாகி, இறுதியில் இறந்தே போனாளாம்.

ஒரேயடியாக இறந்து போயிருந்தாலாவது பரவாயில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து போயிருக்கிறாள் என்பதை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கும். உண்மையில் இதுவும் ஒருவகையில் கொலைதானே?

இதில் அதிகம் வருத்தம் தரக்கூடிய விடயம், கணவனும், அவளை அத்தனை செல்லமாக வளர்த்த அப்பா, அம்மா, சகோதரர்கள் கூட அவளது கஷ்டத்தை புரிந்துகொண்டு, அவளைக் குணப்படுத்த வேறு முயற்சிகளை எடுக்காமல், அது எல்லாம் தீய சக்தியால் வந்த விளைவு, அதற்கு இதுதான் முடிவு என்று நம்பிக் கொண்டு இருந்ததுதான்.

அவளது அந்த அழகிய, குழந்தைத்தனமான முகம் இன்னும் என் நினைவில் பதிந்துள்ளது. .

எனது ஆசிரியர்!

ஆட்டோகிராஃப் இன் கதை சொன்னேன்தானே. அங்கே பக்கங்களைப் ஒவ்வொன்றாக புரட்டிச் செல்கையில், அழகான கையெழுத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆசிரியர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அவரைப் பற்றி இத்தனை நாளும் எப்படி நினைக்காமல் இருந்துவிட்டேன் என்று ஆச்சரியத்துடன் எண்ணிப் பார்க்கிறேன்.

அந்தப் பாடசாலையில், நாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து வகுப்பேற்றம் செய்யப்பட்டு, புதிய வகுப்புக்கு ஒரு தை மாதத்தில் போகிறோம். எங்களுக்கு ஒரு புதிய வகுப்பாசிரியர் வரப் போகிறார் என்று சொல்லியிருந்தார்கள். வகுப்பிற்கு மட்டும் அவர் புதியவர் அல்ல, அந்தப் பாடசாலைக்கே புதிதாக வருகிறார் என்றதும், அனைவரிடமும் அவரைப் பார்ப்பதில் அதீதமான ஆவல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

முதலாம்நாள், முதலாம் பாடம், மிகவும் ஆர்வத்துடன், யார் வந்து நமது வகுப்பினுள் நுழையப் போகிறார் என்று காத்திருந்தோம். அந்த ஆசிரியர் மெதுவாக வந்து வகுப்பறையினுள் நுழைந்தார். மெல்லிய உருவம், பொது நிறத்தைக் கொண்டவர். சுமாரான உயரம். ஆனால், அவர் கண்களில் மட்டும் ஒரு ஒளி. அத்தனை மாணவர்களையும் கட்டிப் போடக் கூடிய ஏதோ ஒரு கவர்ச்சி. அவர் வகுப்பில் வந்து பேச ஆரம்பித்ததும், அனைத்து மாணவர்களும், ஏதோ ப்ரேயரில் இருந்ததுபோல், ஒரு சிறு சத்தமும் செய்யாமல் கேட்டுக்கொண்டு இருந்தோம். அன்று அவர் எந்த பாடமும் நடத்தவில்லை. முதல் பாடம் முழுமையும் நம்முடன் கதைத்தார்.

அவர் அப்படி என்ன கதைத்தார் என்று கேள்வி எழுகிறதா? நம்முடன் ஒரு நண்பனைப் போல், சகோதரன்போல், இதமாக, இனிமையாக பல விஷயங்களையும் கதைத்தார். அதுவரை காலத்தில் (ஏன் அதற்குப் பிறகும் கூட) அப்படி ஒரு ஆசிரியரை சந்தித்திருக்கவில்லை. மாணவர்களுடன் பல ஆசிரியர்கள் நட்புடன் பழக விரும்புவதேயில்லை. அப்படி பழகினால், மாணவர்கள் தம்மை மதிக்க மாட்டார்கள் என்பது அவர்களது எண்ணம். வேறு சில ஆசிரியர்கள் நட்புடன் இருக்க விரும்பினாலும், அதை காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவரோ மிகவும் நட்புடன் பழகுவார்.

நாம் அனைவரும், அவர்மேல் அளவு கடந்த அன்பும், அதீத மரியாதையும் வைத்திருந்தோம் என்பதுதான் உண்மை. காரணம் எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த அந்த ஒரு வருடமும், அவர் எங்களுடன் பழகிய விதம், அப்படி நம்மை அவர்பால் இழுத்து வைத்திருந்தது. அவரது குழந்தையின் பிறந்த நாளுக்கு நம்மைத்தான் முக்கிய விருந்தினராக அழைத்திருந்தார் என்பதே நமக்கு பெருமையாக இருந்தது. அவரது வகுப்பு மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அத்தனை பெருமை நமக்கு. அவரால் நமது வகுப்பிற்கே ஒரு தனி மரியாதை இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.

அவர் எனது ஆட்டொகிராஃப் இல் எழுதியிருப்பதை வாசிக்க ஆரம்பிக்கையிலேயே, அந்த வரிகள் மனப்பாடம் செய்தது போல் எனக்கு வந்தது. அது என்னவென்றால்.....

அன்புத்தங்கை கலா!

இறை நம்பிக்கையும், உண்மையும் மனித வாழ்வினைச் சிறப்புடன் பார்க்க உதவும் இரு கண்கள். இவைகட்கு ஒளி கொடுப்பது அன்பு. எனவே அன்பெனும் ஒளிகொண்டு, இறை நம்பிக்கை, உண்மை எனும் இரு கண்களாலும் மனித வாழ்க்கைப் பாதையில் நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி வீறுநடை போடுங்கள். வாழ்வின் வெற்றி உங்களுக்கே!

அண்ணன்,
அ.மு.அருணாசலம்.

இதை வாசிக்கும்போது எனது கண்கள் பனித்தன. எத்தனை அருமையாக ஒரு அண்ணனாக இருந்து இதை எழுதியிருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியும். ஆனால் அங்கே எந்த இடம் என்பது நினைவில் இல்லை. அதை விலாசத்தில் எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால், அங்கேயும் 'நு/கைலன்ஸ் கல்லூரி, ஹட்டன்' என்றுதான் உள்ளது.

நாங்கள் இடம் மாறி யாழ் வந்த பின்னர் சில காலம் நானும் அவருக்கு கடிதம் போட்டிருக்கிறேன். அவரும் பதில் போட்டிருந்தார். ஆனால் எப்போது, எப்படி அந்த தொடர்பு விடுபட்டது என்பது சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தொடர்பு நின்று போனது.

அவருக்கு நம்மையெல்லாம் நினைவிருக்குமா என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் எம்மைப் போல் எத்தனை மாணவர்கள் வந்து போயிருப்பார்கள். எனது அப்பாவும் அதே பாடசாலையில் ஆசிரியராக கடமை ஆற்றியதால், ஒருவேளை நினைவில் வைத்திருப்பாரோ, என்றால் அதற்கும் சாத்தியமில்லை. காரணம், அவர் அந்த பாடசாலைக்கு வந்த வருடத்தில் அப்பா, ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குப் போய் விட்டார். அருணாசலம் மாஸ்டர் நமக்கு எடுத்த பாடம் கணக்கு. அதில் நான் நன்றாகவே செய்வதால், ஒருவேளை என்னை நினைவில் வைத்திருப்பாரோ என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் அப்படி எத்தனை பேர் வந்து போயிருப்பார்கள். மேலும் எல்லோரையும் கணக்கை நன்றாகச் செய்யச்செய்யும் வல்லமை அவரிடம் உண்டே.

அவர்பற்றி அறிய மிகவும் ஆவலாயுள்ளது. ஒருவேளை இதை வாசிப்பவர்களில் அவரது உறவினர்களோ, அவரைத் தெரிந்தவர்களோ, ஏன் அவரது பிள்ளைகளோ கூட இருக்கக் கூடும். அப்படி யாராவது இருந்தால், தயவு செய்து எனக்கு அறியத் தாருங்கள்..

Autograph!

கடந்த வருடம் கோடை விடுமுறைக்கு இலங்கைக்குப் போயிருந்தோம். அப்போது யாழ்ப்பாணமும் போய் வந்தோம். அப்போது எனது பழைய ஆட்டோகிராஃப் கையில் கிடைத்தது. நமது வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் கிளம்பிய பின்னர், எங்களது வீட்டை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது என்று முடிவெடுத்தபோது, தம்பி அங்கிருந்த சில பொருட்களை தன்னுடன் எடுத்துச் சென்று வைத்திருந்தார். அதில் ஒன்று இந்த ஆட்டோகிராஃப்கள். என்னிடம் இருந்த 4 ஆட்டொகிராஃப்களில், இரண்டைக் காணவில்லை. இரண்டு மட்டுமே அங்கே இருந்தது. இரண்டு தொலைந்து விட்டாலும், தம்பி மற்ற இரண்டையாவது மிகவும் பொறுப்புடன் வைத்திருந்து என்னிடம் தந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு அப்போது அதை பொறுமையாக வாசிக்க முடியாது என்பதால், அவற்றை, அப்படியே என்னுடன் இங்கே எடுத்து வந்திருந்தேன்.

இங்கு வந்து சேர்ந்ததும், பெட்டிகளை அடுக்கியபோது, இவை மீண்டும் கையில் கிடைத்தது. ஆறுதலாக இருக்கும் வேளையில் வாசிக்கலாம் என்று, அவற்றை ஒரு மேசை இழுப்பறையினுள் போட்டேன். பின்னர் அதை மறந்தே போனேன். இதோ ஒரு வருடத்துக்கு மேல் முடிந்து விட்டது. இந்த வாழ்க்கையின் அவசரகதி நிலைதான் இதற்குக் காரணம் போலும் என்று எண்ணியபடியே அந்த ஆட்டொகிராஃப் இல் ஒன்றை எடுத்துப் பார்த்தேன். அதன் நிறம் மங்கி, தாள்களின் நிறம் பழுப்பாகி, சோபையிழந்து காணப்பட்டது. பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். கவர் தனியாக கழன்று வந்திருந்தது. உள்ளேயும் சில பக்கங்கள் கிழிந்திருந்தது. ஒரு காலத்தில், பொக்கிஷமாக நான் பாதுகாத்து வைத்த பொருட்களில் ஒன்றான இந்த ஆட்டோகிராஃப் க்கு நேர்ந்த கதியை எண்ணிப் பார்க்கிறேன்.

அந்த ஆட்டொகிராஃப் நான் Hatton Highlands College (இலங்கையில் மலை நாட்டிலுள்ள ஒரு பாடசாலை) இல் படித்துவிட்டு, அப்பா, அம்மாவின் இடமாற்றம் காரணமாக யாழ்ப்பாணத்துப் போக வேண்டி வந்த சூழ்நிலையில் அங்கிருந்தவர்களிடம், அவர்களது நினைவாக வாங்கிய ஆட்டோகிராஃப். அதில் எனக்குப் பிடித்த ஆசிரியர்கள், சினேகிதிகள் என்று பலரும் கையொப்பமிட்டிருந்தார்கள்.(அவர்களில் குறிப்பாக ஒரு ஆசிரியர்பற்றி நிச்சயம் இங்கே சொல்லியே ஆகவேண்டும். அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்). அத்துடன் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி வகுப்பிலிருந்த அனைவருமே அதில் கையொப்பமிட்டிருந்தனர். அங்கிருந்து புறப்பட வேண்டி வந்த நாளில் நான் அழுத அழுகையை எண்ணிப் பார்க்கிறேன். அந்த சிறிய வயதில், ஏதோ அந்த சினேகிதிகளை எல்லாம் பிரிந்து விட்டால், எனது வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்பதுபோல், அப்படி அழுதேன். ஆனால், இப்போது நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. காலம்தான் நமது வாழ்வில் எத்தனை மாற்றங்களை செய்து விடுகிறது.

நெருங்கிய சினேகிதிகளை நான் மறக்கவில்லைத்தான் என்றாலும், அவர்களது தொடர்பு எல்லாம் இப்போது முற்றாக நின்று போய் விட்டது. அதில் பலரும் எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட இப்போது தெரியாது. அப்போது மிக மிக முக்கியமாக மனதிற்குப்பட்ட அந்த நட்பு, இப்போது முக்கியத்தை இழந்துபோய் இருக்கிறது. அங்கிருந்து நான் புறப்பட்ட சிறிது காலத்திற்கு, கிழமைக்கு ஒரு கடிதமாவது எனது நெருங்கிய தோழிகளுக்குப் போடுவேன். அவர்களும் அடிக்கடி போடுவார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களின் நீள, அகலம் இப்போதும் மனதில் வருகிறது. எத்தனை நீளமான கடிதம். பெரிய பேப்பரில் 4, 5 பக்கங்கள் வரை கூட கடிதங்கள் நீண்டிருக்கின்றன. அப்படி என்னதான் எழுதிக் கொண்டோமோ, இப்போது நினைவில் இல்லை. அதிலும் உஷா என்ற எனது நெருங்கிய தோழியின், அழகான, குண்டுக் குண்டு எழுத்துக்களைத் தாங்கி வரும் அந்த நீளமான கடிதங்களை வாசிப்பதே இனிமையாக இருக்கும். எனக்குப் புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால், நான் தவறாது கடிதம் போடுவேன். அவர்களிடமிருந்து வரும் கடிதங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து ஒரு கால கட்டத்தில் நின்றே போய் விட்டது.

அவர்களை எல்லாம் விட்டுப் பிரிந்த பின்னர், உஷா என்ற தோழியை மட்டும் இரு தடவைகள் சந்திக்க முடிந்தது. இன்னொரு தோழி பேபி இறந்துவிட்டாள் என்பதை உஷா மூலம் அறிந்துகொண்டேன். அவளின் இறப்பு ஒரு அதிர்ச்சி நிறைந்தது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லலாம். மற்றவர்கள்பற்றி உஷாவுக்கே கூட அதிகமாய் தெரியவில்லை. உஷாவும் தற்போது எங்கே என்று தெரியவில்லை.

இப்போது இந்த ஆட்டோகிராஃப் ஐப் பார்க்கையில் அதில் கையொப்பமிட்டுள்ள ஒரு சிலரை நினைவில் கூட இல்லை என்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை..

மழை!

என்ன இது... 'மழை ஷ்ரேயா' வுக்குப் போட்டியாக இங்கே மழை பற்றிய பதிவா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். இது சும்மா, இங்கே நமது இடத்தில் பெய்திருக்கும் மழை பற்றிய பதிவுதான்.

வழக்கமாக எமது வீட்டு ஜன்னல் இரவு நேரங்களில்(லும்) கொஞ்சமாய் திறந்தே இருக்கும். ஆனால் நேற்றிரவு குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததனால், ஜன்னல்கள் அனைத்தையும் முழுமையாகப் பூட்டி விட்டே படுத்தோம். நமது இடத்தில் நேற்றிரவெல்லாம் மழை பெய்து தள்ளியிருக்கிறது. ஆனால் நமக்கு எதுவுமே தெரியாது. ம்ம்ம். இரவு சுகமான உறக்கத்தில் இருந்த நாம், காலையில் எழுந்து பார்த்தபோது மழை பெய்துகொண்டிருந்தது. ஜன்னலூடாக வெளியே பார்த்தால், வீட்டிற்கு முன்னால், வீதியில் பல பெரிய வெள்ளை நிற பிளாஸ்டிக் பைகளில் மூட்டைகளைப் போட்டு வைத்திருந்தார்கள். எதற்கு என்று யோசித்துப் பார்த்தபோதுதான் புரிந்தது, மழைத் தண்ணீர் வழிந்து வீட்டுப்பக்கம் வந்து விடாமல் போட்டிருக்கிறார்கள் என்று.

அப்போதும்கூட கடுமையான மழை பெய்திருப்பது தெரியவில்லை. இன்று மழை என்றபடியால், எனது நடைப்பயணத்தை ஒத்தி வைக்கும்படி கணவர் கூறினார். நானோ, மறுத்துவிட்டு, ரெயின்கோட் சகிதம் நடந்தே வேலைக்கு புறப்பட்டுவிட்டேன். வெளியே வந்தால், இந்தக் குளிரிலும், மழையிலும் சிலர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருப்பதைக் காண முடிந்தது. நமது வீட்டுப்பக்கம் பெரிதாக மழையின் பாதிப்பு எதையும் காண முடியவில்லை. அப்படி இருந்தும், முன்னேற்பாடாக இவ்வளவு வேலைகள் செய்யப்படும் இடத்தில் இருக்கிறோமே என்பது மனதில் ஒரு சிறு திருப்தியைத் தந்தது. அதே வேளை, இவ்வளவு மழை பெய்ததோ, இத்தனை பாதிப்பு நடந்ததோ எதையுமே அறியாமல், நாம் சுகமாக நித்திரையில் இருந்த இந்த குளிர் இரவில், இந்த மழையில், சிலர் நமக்காக கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்களே என்பது உறுத்தலாகவும் இருந்தது.

அதன் பின்னர் செய்திகளை எல்லாம் அறிந்தபோது மனதுக்கு கஷ்டமாகவும் இருக்கிறது. இயற்கையின் அழிவுகள்தான் எத்தனை ரூபத்தில்? :(

இங்கே வேலைக்கு வந்த பின்னர்தான் மழையின் பாதிப்பு பற்றிய செய்திகளை வாசிக்கவும், கேட்கவும் முடிந்தது. (வேலையில் இருந்துதானே blog எழுத முடியும், பின்னே வீட்டிலிருந்தா எழுத முடியும்?). நேற்றைய தினம் மட்டும் சராசரியாக 100 - 150mm மழை இந்தப் பகுதியில் பெய்திருப்பதாக அறியப்படுகிறது. ஒரு சில இடங்களில் கடந்த ஒரு தினத்தில் மட்டும் 179mm மழை பெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சில இடங்களில், பாலங்களுக்கு மேலாக தண்ணீர் வெள்ளமாய் பாய்வதையும், பள்ளமான பகுதிகளில் வெள்ளம் வீதிகளில் பாய்ந்து கொண்டிருப்பதையும் காண முடிவதாகக் கூறுகிறார்கள்.

மிக அண்மையாக உள்ள பிரதேசமொன்றில், கடும் மழையினால் ஏற்பட்ட மண் சரிவினால், சில வீடுகள் உடைந்து விழுந்துள்ளது. இதில் ஒருவர் இறந்துள்ளார். மற்றும் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் குழந்தைகள் நால்வரும், பெரியவர்கள் ஐவரும் அடங்குகின்றனர். இந்த இடங்களில், தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.

சரியாக நீந்தப் பழகாமல் விட்டுவிட்டேன், பார்க்கலாம்..

சும்மா ஒரு இடக்கு மடக்கு கேள்வி!

இது ஒரு இடக்கு மடக்கு கேள்வி. "நல்ல கேள்வி எதுவும் கேக்க தெரியாதா? லொள்ளுக் கேள்வியா இருந்தா இங்க எதுக்கு போடணும்" அப்படின்னு சில குரல்கள் ஒலிக்கிறா மாதிரி இருக்கு. காரணம் இருக்கே, சும்மா போடுவனா என்ன? இந்த கேள்வியை என்கிட்டே ஒருத்தர் கேட்டப்போ நான் கொஞ்ச நேரம் குழம்பிப்போனேன். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' அப்படின்னு நினைச்சு, என்னைப்போலவே ஒரு சிலராவது, அட்லீஸ்ட் ஒரு சில நிமிஷமாவது குழம்பிப் போக மாட்டாங்களான்னு ஒரு சின்ன நப்பாசையோடவும், நல்லெண்ணத்தோடவும் இதை இங்க புளொக்ல போடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.

இந்த கேள்வி பார்த்ததும் 'இதெல்லாம் ஒரு கேள்வியா' அப்படின்னு திட்டுறவங்க பதிலே சொல்லாமே போயிடுங்க (பப்ளிக்கா நான் திட்டு வாங்கிட கூடாதில்லையா, அதுதான்). அப்புறம், கொஞ்ச நேரமாவது குழம்பி போறவங்க, தயவு செய்து ஒரு பதில் போட்டுட்டு போயிடுங்க. (எனக்கும் கொஞ்சம் திருப்தி வேணுமில்லையா?). கொஞ்ச நேரம் குழம்பிப்போனாலும், அதை இங்க பப்ளிக்கில காட்டிக்க விருப்பமில்லாதவங்க, அட்லீஸ்ட் அந்த நட்சத்திரத்துலே ஒரு குத்து வைத்து, மத்தவங்களுக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்துட்டு போங்க (எனக்கு இருக்கிற அந்த நல்லெண்ணம் உங்களுக்கும் இருக்கும் ன்னு நம்பறேன், ஹி ஹி, இன்னும் ஒரு சிலரை சேத்து குழப்பலாமே?).

"எல்லாம் இருக்கட்டும், இந்த முன்னுரை எல்லாம் நமக்கெதுக்கு அந்தக் கேள்விதான் என்ன?" அப்படின்னு கூக்குரல் எல்லாம் வருதுபோல இருக்கு. கேள்வி கடைசியாத்தான் வரும். அதுக்கு முன்னாலே ஒரு சின்ன கதை வருது, இருங்க.

ஒரு ஊருல அப்பன், சுப்பன் ன்னு ரெண்டு தொழிலாளிங்க, ஒரு முதலாளிகிட்டே வேலை செஞ்சாங்களாம் (தொழிலாளிங்கன்னா முதலாளிகிட்டேதான் வேலை பாப்பாங்க, இல்லாமெ ஒரு தொழிலாளி கிட்டேவா வேலை பாப்பாங்க, அப்படின்னு கடுப்பாயிடாதீங்க). அந்த முதலாளிகிட்டே ஒரு ஆடு இருந்துதாம். அந்த ஆடு ஒரு நாள் ரெண்டு குட்டி போட்டுதாம். ஆனால் அந்த ஆடு குட்டி போட்டதும் செத்துப் போச்சாம். அட அம்மா ஆடு இல்லாமே இந்தக் குட்டிகளை எப்படி வளர்க்கிறதுன்னு நினைச்ச அந்த முதலாளி, அந்த ரெண்டு குட்டிகளையும் விக்கிறதுக்கு முடிவு செஞ்சாராம். அந்த தொழிலாளிங்க ரெண்டு பேர்கிட்டேயும், அதை விக்கிறதுக்கு ஏற்பாடு செய்ய சொன்னாராம். அவங்களும் சரின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனாங்க. போற வழியிலே அவங்க ரெண்டு பேரும் யோசிச்சாங்க 'அட இந்த ஆட்டுக் குட்டிங்கள நாமளே வாங்கி வளர்த்தா என்னா' அப்படின்னு. அவங்க ரெண்டு பேரும், ஆளுக்கு 25 ரூபா போட்டு அந்த ஆட்டுகுட்டிங்க ரெண்டையும், 50 ரூபாவுக்கு முதலாளி கிட்டே வாங்கலாம்னு முடிவு பண்ணினாங்க. (இந்த விலைவாசியிலே 50 ரூபாவுக்கு யாரு ஆட்டுக்குட்டி, அதுவும் ரெண்டு குட்டிங்க தருவா அப்படின்னுன்னு தர்க்கம் எல்லாம் பண்ணாதீங்க. சும்மா ஒரு கணக்குக்குத்தானே, கண்டுக்காதீங்க). ஆங்... நான் எங்கே விட்டேன், ஆஆ... அப்படியே மறுநாள் முதலாளிகிட்டே போய் 50 ரூபா கொடுத்துட்டு, ரெண்டு ஆட்டுக் குட்டியையும் வாங்கிகிட்டு போனாங்க. அவங்க போனப்புறம்தான் முதலாளி யோசிச்சார், 'அட, நம்மகிட்டே வேலை பாக்குற ஆளுங்களாச்சே, அதுனாலே கொஞ்சம் விலையை கொறைச்சுக்கலாமே' அப்படின்னு. யோசிச்சவர் ஒடனேயே, அங்கே வேலை பார்த்துக்கிட்டு இருந்த கந்தனைக் கூப்பிட்டு, 5 ரூபாவைக் கொடுத்து, "இதை அவங்ககிட்டே திருப்பிக் கொடுத்துட்டு வா" அப்படின்னு கொடுத்து அனுப்பினார். அந்தக் கந்தன் என்ன பண்னினான்னா, அதுல 2 ரூபாவை அவன் எடுத்துக்கிட்டு 3 ரூபாவை மட்டும் அந்த அப்பன் + சுப்பன்கிட்டே கொண்டுபோய்க் குடுத்தான். அவங்க ரெண்டு பேரும், அதை பாதியாக்கி 1.50 ரூபாவா எடுத்துக்கிட்டாங்க.

சரி இதுதான் கதை. இப்போ கேள்வி என்னன்னா, அப்பனுக்கும், சுப்பனுக்கும், அவங்க அவங்க குடுத்த காசிலே 1.50 ரூபா திருப்பி கிடைச்சாசு. அப்போ, அவங்க ஒவ்வொருத்தரும் அந்த ஆட்டுக் குட்டிக்கு கொடுத்திருக்கிற காசு 25-1.50=23.50 ரூபா. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்திருக்கிற காசு 23.50 + 23.50 = 47 ரூபா, சரியா? இதுல கந்தன் எடுத்துக்கிட்ட காசு 2 ரூபா, சரியா? அப்போ 47 + 2 = 49 ரூபா ஆச்சா? அப்படின்னா, அந்த மிச்சம் 1 ரூபா எங்க போச்சு? இதுதான் கேள்வி.

என்ன? கவுண்டமணி, செந்திலோட வாழைப்பழ க
ணக்கு மாதிரி இருக்கா? இல்லையே அப்படின்னு சொல்லுறீங்களா? அப்போ பதிலை சொல்லிட்டு போங்க பார்க்கலாம்.

கண்ணீர்ப்பூக்கள்!!

போன வார விடுமுறையில் கண்ணாடிப்பூக்கள் படம் பார்த்தேன். அதை இப்பத்தான் பார்த்தீர்களா என்று பலரும் சலித்துக் கொள்வதுபோல் எனக்கு ஒரு தோற்றம். என்ன செய்வது நானிருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் எடுப்பது இலகுவல்லவே. லண்டன் போயிருந்தபோது ஒரு படத்துக்கு 3 பவுண்ஸ் (மட்டுமே) கொடுத்து DVD கொஞ்சம் வாங்கி வந்தோம். அதுலே ஒன்றுதான் இந்தக் கண்ணாடிப்பூக்களும்.

நிறைய நாளைக்குப் பிறகு நல்ல ஒரு கருத்துள்ள படம் பார்த்த திருப்தி. இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தை மேல் வைத்திருக்கும் கவனங்கள் குறைந்து விடுவதும், அதனால் அந்த குழந்தைகள் மனதில் எழும் பிரச்சனைகளையும் கதை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் எல்லா அம்மா, அப்பாக்களும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம்.

படத்தில் பல இடங்கள், மனதை ஆழமாகத் தொட்டது. ஒரு பக்கம் இறந்து போன குழந்தை, மறு பக்கம் அந்தக் குழந்தையின் இறப்புக்கு தமது மற்ற குழந்தையே காரணம் என்பதை அறிந்ததில் அதிர்ச்சி, அந்தக் குழந்தையை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பது புரியாத குழப்பம், தமது குழந்தை தப்பு செய்வதற்கு தாமே காரணமாகி விட்டோமே என்ற தவிப்பு.... இப்படியே அந்தப் பெற்றோர் படும் அவஸ்தைகள் யதார்த்தமாக சொல்லப்பட்டு இருந்தது.

அந்தக் குட்டிப்பையனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியதும், அங்கே அந்த வில்லனை பொறுப்பாளராகப் பார்த்ததுமே, நெஞ்சுக்குள் படபடப்பு. அந்த நபர் கொஞ்சம் இடக்கு மடக்காக ஆரம்பத்தில் இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கடுமை அங்கே தொடர்ந்து வரவில்லை (நல்ல வேளையாக).

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளிகளில் இப்படித்தான் குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்களா? அப்படியானால் சீர்திருத்தப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் நோக்கமே பாதிப்புக்கு உள்ளாகாதா? இந்தக் கேள்விதான் மனதை அதிகம் பாதித்தது.

எனது ஞாயிறு!!

போன ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை எதுவும் பெரிதாக இருக்கவில்லை என்று தோன்றியது. "இன்றைக்கு இந்த வலைப்பதிவுலே ஏதாவது எழுத வேணும்" என்று காலையிலேயே நினைத்துக் கொண்டேன். (வலைப்பதிவு இருக்கே என்பதற்காக எழுதுறதா? அல்லது இருப்பதை எழுதுறதுக்காக வலைப்பதிவா? ஒன்றுமே புரியலையே?).

காலை எழுந்து, இருந்த வேலைகளை முடித்து விட்டு, மகளை டான்ஸ் கிளாசுக்கு அப்பாவுடன் அனுப்பி விட்டு, கணினிக்கு போக முயன்றபோதுதான் பார்த்தேன், மகளுடைய புத்தக மேசை கொஞ்சம் அலங்கோலமாய் இருந்தது. சரி அதை அடுக்கி வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்து, அந்த வேலையை ஆரம்பித்தேன். அதை அடுக்கிக் கொண்டு போனபோது பார்த்தால் அங்கே சூரியகாந்தி விதைகள் இருந்த ஒரு சின்னப் பை இருந்தது. அடடா, இதை இந்த சம்மருக்கு முளைக்க வைக்க வேண்டும் என நினைத்திருந்தேனே, இது எப்படி இங்கே வந்தது (வேறு எப்படி, வழக்கம்போல் மகளுடைய வேலைதான்), இன்னும் வேறு சில தாவர விதைகளும் வைத்திருந்தோமே என்று நினைத்துக் கொண்டே அவற்றை தேட ஆரம்பித்தேன். அதை தேடிக் கொண்டு போகும்போது கிச்சின் லே ஒரு ஒரு drawer க்குள்ளே இருந்தது. அதை எடுக்கலாம் என்று போனால், அதற்குள் தேவையே இல்லாத பல பொருட்கள். இதை எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம் என்று எண்ணிக் கொண்டே அதை கிளீன் பண்ண தொடங்கினேன். அதற்குள் book shelf இல் வைக்க வேண்டிய பொருட்களும் சேர்ந்து இருந்தது. சரி அவற்றை எடுத்துக் கொண்டு book shelf பக்கம் போனேனா, அங்கேயும் மீள அடுக்க வேண்டியவாறு நிலமை.

பிறகென்ன, book shelf அடுக்கி வைத்து விட்டு, மீண்டும் கிச்சனுக்கு வந்து drawer எல்லாம் கிளீன் பண்ணி அடுக்கி வைத்து, பிறகு மகளுடைய மேசைக்கு வந்து, அதெல்லாம் அடுக்கி முடித்து........ அப்பாடா, நேரமும் போய்விட்டது. இனி என்ன சமையலுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத்தான் நேரமிருந்தது.

நான், என்னை ரொம்ப சிஸ்டமட்டிக் ஆன ஆள் என்று நினைத்திருந்தேனே. இவ்வளவுதானா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

பி.கு. மகளின் மேசையைப் பார்க்கும்போது, நான் சிறு வயதில் வைத்திருந்த ஒரு மேசை நினைவுக்கு வருகிறது. அதுபற்றியும் எழுத வேணும்.

நடைப்பயணம்!

என்னது நடைப்பயணமா? ஏதாவது போராட்டமா?

இல்லை. போராட்டமும் இல்லை, ஒரு மண்ணுமில்லை.

அப்போ ஏதாவது வேண்டுதலா?

இல்லையே, எந்த வேண்டுதலும் இல்லை. இந்த நடைப்பயணம் எனக்காக நானே மேற்கொண்டது.

எந்த தேசத்துக்கு?

எந்த தேசத்துக்குமில்லைங்க. எனது வீட்டிலிருந்து வேலைக்கு தினமும் நடக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

பூ இவ்வளவுதானா?

அவ்வளவேதான்.

இதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா? சரி சரி, எவ்வளவு நேரமெடுக்கும் நடந்து போக?

ஒரு 20/25 நிமிஷமெடுக்கும் (போறதுக்கு மட்டும்).

எதுக்காக இந்த நடைப்பயணம்?

ஒரு மாசமா லீவில அங்கங்கே சுத்தி திரிஞ்சதுல, எல்லோருடைய, அன்புத்தொல்லையினால், அளவுக்கதிகமாக சாப்பிட்டு ஒரு சுற்று பெருத்த மாதிரி ஒரு உணர்வு. அதுதான் தினமும் நடந்து அந்தச் சுற்றை குறைத்துக் கொள்ளும் ஐடியா.

சரி சரி, நடக்கட்டும், நடக்கட்டும், நடைப்பயணம் தொடரட்டும்.

இன்னும் இது எத்தனை நாள் தொடரும்னு தெரியலையே. அதுதான் நமக்கு குளிர் காலம் வர ஆரம்பிச்சிருச்சே, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனாலும் இந்த நடக்க ஆரம்பிச்சதுல இருந்து நிறைய விஷயங்களை யோசிக்க நேரம் கிடைச்சது மாதிரி இருக்கு. தொடரத்தான் வேண்டும்.

சும்மா சும்மா!

எனக்கு சில நேரங்களில வலைப்பதிவில எழுதுறதுக்கு ஏதாவது மனதில ஓடும். ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது, அல்லது எங்காவது நடந்து கொண்டிருக்கும்போது... இப்படியே கணினிக்கு முன்னாலே இல்லாத நேரத்துல என்னெல்லாமோ மனதில வரும். ஆனால் பிறகு கணினிக்கு முன்னுக்கு வந்து இருந்தால் எதுவும் எழுத தோன்றாது. அது ஏனென்றும் தெரியேல்லை.

அதுல நிறைய விஷயங்கள் சும்மா எதுவுமே இல்லாத, உப்புச் சப்பில்லாத விஷயங்கள். ஆனாலும் எழுத வேணும் என்று தோன்றும். சரி, அதை எல்லாம் என்னிடம் இருக்கும் வலைப்பதிவுகளில் எதில் போடலாம் என்று மண்டையைக் கசக்கி யோசிச்சுப் பாத்தன். எதுலயுமே போட ஏலாது என்றுதான் மனதுக்கு படுகுது. அதுனால, இந்த 'சும்மா சும்மா' வலைப் பதிவை தொடங்கியிட்டன் (கஷ்ட காலம்).

இனி ஏதாவது எனக்கு மனசில வாற சும்மா சும்மா விஷயம் எல்லாம், நேரமும் ஒத்துழைத்தால் இங்கே, இந்தப் பதிவிலே விழுந்து கிடக்கும்.