ஆறுதல் வார்த்தைகள்!!

பல சமயங்களில் எழுத எத்தனையோ இருந்தாலும், எதையும் எழுத தோன்றுவதில்லை. ஆனால் இன்று தமிழ்நதியின் 'மரணம் பற்றிய குறிப்பு', பார்த்ததும் எழுதத் தோன்றியது.

தமிழ்நதி, தனக்கேயுரிய நடையில் தற்கொலை மரணம் ஒன்றின் பாதிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அவர் அங்கே எழுதியிருப்பது அனைத்தும் மனதில் மெல்லிய வலியை தந்தாலும், சில வரிகள் கவனத்தை கொஞ்சம் அதிகமாகவே ஈர்த்தது. காரணம் அந்த வரிகளில் உள்ள விடயம்பற்றி சில நாட்களாக நானும் யோசித்துக் கொண்டிருப்பதுதான். அந்த வரிகள்....

&&“இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.&&

தற்கொலையை நோக்கி நகரும் ஒருவருக்கு, சில சமயம் தமிழ்நதி கூறியிருப்பதுபோல, வெற்று வார்த்தைகள் எதுவும் இல்லாமல், சில சின்ன சின்ன செயல்கள் கூட அவரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வரலாம். இந்த வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகின்றது. இந்த ஆறுதல் வார்த்தைகள் உதவுவது மரணத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல. மரணத்தைப் பற்றி சிந்திக்காத, உடலால் வாழ்ந்து கொண்டு, உணர்வால் இறந்து கொண்டிருக்கும் சிலருக்கு கூட இப்படி சில ஆறுதல் வார்த்தைகளோ, அன்றில், வார்த்தைகள் எதுவுமற்ற செயல்களோ அவருள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நிரந்தரமற்ற இந்த வாழ்வில், எவரும், எப்போதும் இல்லாமல் போகலாம். அப்படி இருக்கையில், ஒருவர்மேல் ஒருவருக்கு எதற்கு தேவையற்ற ஆதங்கங்கள், கோபங்கள். சில சமயம் உண்மையான அன்பால் பிணைக்கப்பட்டவர்களே கூட கோப தாபங்களால் ஒருவரை ஒருவர் வருத்திக் கொள்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ஒருவருக்கு ஏதாவது ஆகி விட்டால், மற்றவரின் நிலை என்ன? நாம் வாழும் குறுகிய வாழ்க்கை காலத்தை, ஏன் நல்ல விதமாக அமைத்துக் கொள்ளக் கூடாது?