புரியாத கதை!

காலைநேரம். மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வெளியே வந்தேன். வெளியே மழை. குடையை விரித்தபோது, என்னை அறியாமல் சிறு வயதில் மனப் பாடம் செய்த பாட்டு வாயில் வந்தது. அதை உரத்துச் சொன்னேன்.

குடை பிடித்து செருப்புமிட்டு
புத்தகமும் கொண்டு
குடுகுடென நடந்து வரும்
குழந்தைகளே கேளீர்

(சிறுது இடைவெளி விட்டேன். மகள் சொன்னாள் ""நல்ல பாட்டம்மா, படியுங்கோ")

மழைக்காலம் மிக வழுக்கும்
மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு
விலகி வரல் வேண்டும்

("ஏனம்மா splash splash அடிச்சுக் கொண்டு வந்தால்தானே நல்லாயிருக்கும்?" இது மகள். "இங்க நீங்க shoe போடுறதால splash splash அடிக்கலாம். ஆனா slippers அல்லது வெறும் காலோட அங்க நாங்க விளையாடினால் காலில புண் வரும்" இது நான். "ஓஓஓஓஓஓஒ" பெரீய ஒரு ஓ போட்டாள் மகள்.)

வெள்ளத்தில் கல்லெறிந்து
விளையாட வேண்டாம்
("ஏனம்மா விளையாடக்கூடாது?" இது மகள். "கல்லெறிஞ்சு விளையாடினால், உடுப்பெல்லாம் சேறாகி விடும். மிச்ச பாட்டை கேளுங்கோ" இது நான்.)
வீண் சண்டையால் வழுக்கி
விழுந்தெழும்ப வேண்டாம்

(கடைசி பந்தி நினைவுக்கு வர கொஞ்சம் அடம் பிடித்தது. பிறகு ஒரு மாதிரி, அதையும் தேடிப் பிடித்து பாடினேன்.)

கண்மணிகாள் நீர்ச்சிரங்கு
காலில் வரும் கவனம்
கண்ணுறக்கம் இல்லாமல்
கதறி அழ நேரும்

"அது என்னம்மா நீச்சிரங்கு?" என்று மகள் கேட்க, அதுக்கு விளக்கம் கொடுத்தேன். பிறகு "பாத்தீங்களா? அம்மாக்கு சின்ன வயசுல பாடமாக்கினது இன்னும் நினைவிருக்கு" என்று நானே பெருமைப் பட்டுக் கொண்டேன். "வேறு என்னெல்லாம் நினைவிருக்கு?"
"நிறைய எல்லாம் நினைவிருக்கு".
"அதுதான் என்ன நினைவிருக்கு?" மகளுக்கு அம்மாக்கு உண்மையா நினைவிருக்கா என்ற சந்தேகம் தீரவில்லை. :)

"ம்ம்ம்,, அம்மா சின்ன வயசுல நடிச்ச நாடகம் ஒண்டு நினைவிருக்கு".
"அது என்ன? சொல்லுங்கோ, பாப்பம்", அட அவளுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை.
"அது தமிழ் இலக்கணத்தோட வரும். நான் சொன்னாலும், உங்களுக்கு விளங்காது".
"நீங்க சொல்லுங்கோ".

இவள் இன்றைக்கு விடமாட்டாள் என்று புரிந்தது. "சரி சொல்லுறன் கேளுங்கோ. அது கண்ணகி நாடகம். அதுல நான் king. ஆனால் எனக்கு மற்றவை பேசின வசனங்களும் பாடம். அதையும் சேர்த்து சொல்லுறன், சரியா?"

"ஓம்".
"ஓகே"

மன்னன்:"அரண்மனைக் காவலர்களை மீறி ஆவேசக் கோலத்தில் உள்ளே நுழையும் நீ யார்?"
கண்ணகி:"நானா? புறாவுக்கு உடல் தந்து புகழ்பெற்ற மன்னவனின் வரலாற்றை, தேர்க்காலில் மகனையிட்டு நீதி காத்த மனுநீதிச் சோழனது பெருங்கதையை, நீதியின் இலக்கணமாய் உரைக்கும் திருமாவளவன் கரிகாற்சோழனது (அம்மா, அம்மா, இடையில் மகளின் குறுக்கீடு, ஆனால் நான் நிறுத்தவில்லை :)) பூம்புகாரே எனது ஊர். பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள். என் பெயர் கண்ணகி". சொல்லி விட்டு நான் ஒரு சின்ன இடைவெளி விட்டதும், மகள் இடையில் புகுந்தாள்.

"அம்மா, போதும் நிப்பாட்டுங்கோ. எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை".
"நான் முதலே சொன்னேன்தானே விளங்காதேண்டு".

கண்ணகி, யாருடைய மகள் என்று சொல்லாமல், யாருடைய மருமகள் என்று சொன்னதன் காரணமென்ன என்று எனக்குள் ஒரு கேள்வி ஓடியது. நாடகம் நடித்த வயதில் தோன்றாத கேள்வி இது.

"அந்த நாடகத்தை எனக்கு விளங்குற மாதிரி சொல்லுறீங்களா?" என்று மகள் கேட்டாள். சரியென்று, கண்ணகியும், கோவலனும் பாண்டிய நாட்டுக்கு ஒரு கஷ்டத்தால் வந்தார்கள் என்று தொடங்கி (முன்கதை சொல்லவில்லை, அதில் எனக்கே பல கேள்விகள் உள்ளது என்பதாலும், நாடகம் இந்த இடத்தில் இருந்தே ஆரம்பித்தது என்பதாலும்), கண்ணகி ஊரை எரித்தது வரை சொன்னேன்.

"அது எப்படி எரிச்சாங்க? ஏன் எல்லாரையும் எரிச்சாங்க?" சோகமாகக் கேட்டாள் மகள். எனக்குள் இன்னமும் இருக்கும் கேள்விகள்தான் அவை. அதற்குள் நான் போக வேண்டிய bus வந்துவிட்டதால், அத்துடன் நிறுத்தி விட்டு புறப்பட்டு விட்டேன்.