சங்கடமான கேள்வி?

அண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார் "உங்கட மகள் உங்களை மாதிரியே இருக்கிறா. உங்களை மாதிரியே புன்னகைக்கிறார்". நான் சிரித்தேன். அவர் மேலும் கேட்டார் "இப்படி நிறையப் பேர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா?" என்று. நானும் சொல்லியிருக்கின்றார்கள் என்று சொன்னேன். இந்த கதையை நான் மகளிடம் பேசும்போது சொன்னேன். அவளுக்கு 9 வயது ஆகப் போகின்றது. அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. :)

அவள் வேறு யாரெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள், எப்படி சொன்னார்கள் என்று பெரிய விளக்கங்கள் கேட்டாள். நானும் சொல்லிக் கொண்டு வந்தேன். முன்னொரு தடவை அவளையும் என்னையும் ஒன்றாகச் சந்தித்த, என்னுடன் வேலை செய்யும் ஒருவர் "மகளை குளோனிங் செய்து எடுத்திருக்கிறாயா?" என்று கேட்டதை நினைவு கூர்ந்தேன். இப்படியே கதை போனபோது, குழந்தைகள் அப்பா மாதிரியோ, அம்மா மாதிரியோ இருப்பார்கள் என்று சொன்னேன் (தேவையா எனக்கு??). அவள் உடனே கேட்டாள், "நான் உங்கட வயித்தில இருந்துதானே வந்தேன். நான் எப்படி அப்பா மாதிரி இருக்க முடியும்?". அதுக்கு நான் "அப்பாவுடைய cell இல இருக்கிற DNA யும், அம்மாவுடைய cell இல இருக்கிற DNA யும் சேர்ந்துதான் குழந்தையுடைய cell and DNA வரும். பிறகு அந்த cells பிரிந்து பிரிந்துதான் குழந்தை உருவாகின்றது" என்று சொன்னேன். ஏதோ மாட்டிக் கொள்ளாமல் குழந்தைக்கு சொல்லிவிட்டேன் என்ற இறுமாப்பு வேறு. விடுவாளா அவள், கேட்டாள் அடுத்த கேள்வியை. "நான் உங்கட வயித்துக்குள்ளே இருந்துதானே வந்தேன். பிறகெப்படி அப்பாடை cell and DNA வரும்." தேவையா எனக்கு என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு ஒரு சின்ன idea வந்தது. "உங்களுக்கு DNA என்றால் என்ன என்று தெரியுமா?" என்று கேட்டேன். அதற்கு "அது ஒரு blood என்று பதில் வந்தது." அது blood இல்லை என்று சொல்லி, DNA என்றால் என்ன என்று எளிமையாக விளக்க ஆரம்பித்தேன். பல இடங்களில் அவள் 'விளங்கேல்லை' என்று சொன்னாள். "இப்ப உங்களுக்கு விளங்குறது கொஞ்சம் கஷ்டம். நீங்க இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், அடுத்தடுத்த வகுப்புக்கு போனால் கொஞ்சம் easy யா விளங்கப்படுத்தலாம். அதால நான் பிறகு உங்களுக்கு விளங்கப்படுத்துறேனே" என்று கேட்க அவளும் சரியென்று விட்டாள். அப்பாடா, இப்போதைக்கு தப்பியாச்சு. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு இல்லையென்றே தோன்றுகின்றது.

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்கின்றோம். அதை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதுதான் அதிலுள்ள பிரச்சனை புரிகின்றது. :(