Autograph!

கடந்த வருடம் கோடை விடுமுறைக்கு இலங்கைக்குப் போயிருந்தோம். அப்போது யாழ்ப்பாணமும் போய் வந்தோம். அப்போது எனது பழைய ஆட்டோகிராஃப் கையில் கிடைத்தது. நமது வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் கிளம்பிய பின்னர், எங்களது வீட்டை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது என்று முடிவெடுத்தபோது, தம்பி அங்கிருந்த சில பொருட்களை தன்னுடன் எடுத்துச் சென்று வைத்திருந்தார். அதில் ஒன்று இந்த ஆட்டோகிராஃப்கள். என்னிடம் இருந்த 4 ஆட்டொகிராஃப்களில், இரண்டைக் காணவில்லை. இரண்டு மட்டுமே அங்கே இருந்தது. இரண்டு தொலைந்து விட்டாலும், தம்பி மற்ற இரண்டையாவது மிகவும் பொறுப்புடன் வைத்திருந்து என்னிடம் தந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு அப்போது அதை பொறுமையாக வாசிக்க முடியாது என்பதால், அவற்றை, அப்படியே என்னுடன் இங்கே எடுத்து வந்திருந்தேன்.

இங்கு வந்து சேர்ந்ததும், பெட்டிகளை அடுக்கியபோது, இவை மீண்டும் கையில் கிடைத்தது. ஆறுதலாக இருக்கும் வேளையில் வாசிக்கலாம் என்று, அவற்றை ஒரு மேசை இழுப்பறையினுள் போட்டேன். பின்னர் அதை மறந்தே போனேன். இதோ ஒரு வருடத்துக்கு மேல் முடிந்து விட்டது. இந்த வாழ்க்கையின் அவசரகதி நிலைதான் இதற்குக் காரணம் போலும் என்று எண்ணியபடியே அந்த ஆட்டொகிராஃப் இல் ஒன்றை எடுத்துப் பார்த்தேன். அதன் நிறம் மங்கி, தாள்களின் நிறம் பழுப்பாகி, சோபையிழந்து காணப்பட்டது. பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். கவர் தனியாக கழன்று வந்திருந்தது. உள்ளேயும் சில பக்கங்கள் கிழிந்திருந்தது. ஒரு காலத்தில், பொக்கிஷமாக நான் பாதுகாத்து வைத்த பொருட்களில் ஒன்றான இந்த ஆட்டோகிராஃப் க்கு நேர்ந்த கதியை எண்ணிப் பார்க்கிறேன்.

அந்த ஆட்டொகிராஃப் நான் Hatton Highlands College (இலங்கையில் மலை நாட்டிலுள்ள ஒரு பாடசாலை) இல் படித்துவிட்டு, அப்பா, அம்மாவின் இடமாற்றம் காரணமாக யாழ்ப்பாணத்துப் போக வேண்டி வந்த சூழ்நிலையில் அங்கிருந்தவர்களிடம், அவர்களது நினைவாக வாங்கிய ஆட்டோகிராஃப். அதில் எனக்குப் பிடித்த ஆசிரியர்கள், சினேகிதிகள் என்று பலரும் கையொப்பமிட்டிருந்தார்கள்.(அவர்களில் குறிப்பாக ஒரு ஆசிரியர்பற்றி நிச்சயம் இங்கே சொல்லியே ஆகவேண்டும். அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்). அத்துடன் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி வகுப்பிலிருந்த அனைவருமே அதில் கையொப்பமிட்டிருந்தனர். அங்கிருந்து புறப்பட வேண்டி வந்த நாளில் நான் அழுத அழுகையை எண்ணிப் பார்க்கிறேன். அந்த சிறிய வயதில், ஏதோ அந்த சினேகிதிகளை எல்லாம் பிரிந்து விட்டால், எனது வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்பதுபோல், அப்படி அழுதேன். ஆனால், இப்போது நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. காலம்தான் நமது வாழ்வில் எத்தனை மாற்றங்களை செய்து விடுகிறது.

நெருங்கிய சினேகிதிகளை நான் மறக்கவில்லைத்தான் என்றாலும், அவர்களது தொடர்பு எல்லாம் இப்போது முற்றாக நின்று போய் விட்டது. அதில் பலரும் எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட இப்போது தெரியாது. அப்போது மிக மிக முக்கியமாக மனதிற்குப்பட்ட அந்த நட்பு, இப்போது முக்கியத்தை இழந்துபோய் இருக்கிறது. அங்கிருந்து நான் புறப்பட்ட சிறிது காலத்திற்கு, கிழமைக்கு ஒரு கடிதமாவது எனது நெருங்கிய தோழிகளுக்குப் போடுவேன். அவர்களும் அடிக்கடி போடுவார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களின் நீள, அகலம் இப்போதும் மனதில் வருகிறது. எத்தனை நீளமான கடிதம். பெரிய பேப்பரில் 4, 5 பக்கங்கள் வரை கூட கடிதங்கள் நீண்டிருக்கின்றன. அப்படி என்னதான் எழுதிக் கொண்டோமோ, இப்போது நினைவில் இல்லை. அதிலும் உஷா என்ற எனது நெருங்கிய தோழியின், அழகான, குண்டுக் குண்டு எழுத்துக்களைத் தாங்கி வரும் அந்த நீளமான கடிதங்களை வாசிப்பதே இனிமையாக இருக்கும். எனக்குப் புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால், நான் தவறாது கடிதம் போடுவேன். அவர்களிடமிருந்து வரும் கடிதங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து ஒரு கால கட்டத்தில் நின்றே போய் விட்டது.

அவர்களை எல்லாம் விட்டுப் பிரிந்த பின்னர், உஷா என்ற தோழியை மட்டும் இரு தடவைகள் சந்திக்க முடிந்தது. இன்னொரு தோழி பேபி இறந்துவிட்டாள் என்பதை உஷா மூலம் அறிந்துகொண்டேன். அவளின் இறப்பு ஒரு அதிர்ச்சி நிறைந்தது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லலாம். மற்றவர்கள்பற்றி உஷாவுக்கே கூட அதிகமாய் தெரியவில்லை. உஷாவும் தற்போது எங்கே என்று தெரியவில்லை.

இப்போது இந்த ஆட்டோகிராஃப் ஐப் பார்க்கையில் அதில் கையொப்பமிட்டுள்ள ஒரு சிலரை நினைவில் கூட இல்லை என்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை..